“அவளை பார்க்கணும் அவ்வளவுதான்.." 6,000 மைல்கள் சைக்கிள் பயணம்! காதலியை பார்க்க கண்டம் விட்டு கண்டம் சென்ற காதலன்

பல நாடுகளைக் கடந்து 133 நாட்களும், ஏறக்குறைய 6,000 மைல்களும் PK-விற்கு ஆனது.
Indian man cycled to Sweden
Indian man cycled to Sweden
Published on
Updated on
4 min read

காதல் ஒரு மனிதனை என்னவெல்லம் செய்ய வைக்கும் என்பதை இந்த கட்டுரையி நீங்கள் படித்து முடிக்கும்போது கட்டாயம் உங்களுக்கு தெரியும், புரியும். 1970-களின் நடுப்பகுதியில், PK என்று அறியப்பட்ட பிரத்யும்ன குமார் மகாநந்தியா, டெல்லியில் ஒரு ஸ்வீடன் நாட்டுப் பெண்ணைக் காதலித்துள்ளார். மேலும், தன் காதலியை சென்றடையவேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால் அந்த பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

அவர் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்தியக் கலை மாணவர். அந்த பெண் ஸ்வீடன் நாட்டு உயர்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர். லோட்டா (காதலித்த பெண்) ஸ்வீடனுக்குத் திரும்பியபோது, ​​PK-விடம் விமானப் பயணத்திற்குப் பணம் இல்லை. எனவே, 1977 ஜனவரியில், அவர் 60 ரூபாய்க்குப் பயன்படுத்தப்பட்ட பெண்களுக்கான ரேலி மிதிவண்டி ஒன்றை வாங்கிக் கொண்டு, ஒரு படுக்கைப்பை, ஒரு சிறிய கூடாரம் மற்றும் தனது கலைப் பொருட்களை எடுத்துக்கொண்டு, ஸ்வீடனை நோக்கிய தனது மிதிவண்டி பயணத்தைத் தொடங்கினார்.

நிஜமாகவே வாழ்க்கையில் அவர் எப்போதும் இப்படி ஒரு பயணம் செய்வோம் என்று என்றும் நினைத்திருக்கவே மாட்டார். தான் காதலித்த பெண்ணைச் சென்றடைய வேண்டும் என்பது மட்டுமே PK-விற்கு தெரிந்த ஒரே இலக்கு. தன்னுடைய இலக்கிற்கு சென்றடைய, பல நாடுகளைக் கடந்து 133 நாட்கள், ஏறக்குறைய 6,000 மைல்களும் PK-விற்கு ஆனது.

PK Mahanty love story
PK Mahanty love story

1975-ம் ஆண்டின் பிற்பகுதியில்,PK-விற்கு 26 வயதாக இருந்தபோது, ​​அவர் டெல்லியில் நுண்கலை படித்துக்கொண்டிருந்தார். அவர் ஒடிசாவின் கந்தபடா கிராமத்தில் ஒரு அன்பான குடும்பத்தில் வளர்ந்திருந்தார். டெல்லியில் நுண்கலை படிப்பதற்காக கல்வி உதவித்தொகை பெற்ற அவர், நகர மையத்தில் உள்ள ஒரு நீரூற்றுக்கு அருகில் உருவப்படங்களை வரைந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளார்.

அவரது திறமையைப் பற்றி ஒரு உள்ளூர் செய்தித்தாள் கட்டுரை கூட வெளிவந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போதுதான் லோட்டா அங்கு வந்துள்ளார். அப்போது லோட்டாவிற்கு 20 வயது, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் தனது மூன்று நண்பர்களுடன் ஒரு ஃபோக்ஸ்வேகன் வேனில் இந்தியா முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது தன்னுடைய உருவப்படத்தை வரைவதற்காக வந்தபோதே PK லோட்டாவால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதில் முதல் பார்வைக்கும் காதல் என்ற உணர்விற்கும் மட்டும் இந்த பங்கு இருந்தது என்று கூறிவிட முடியாது, விதிக்கு முக்கியத்துவம் உண்டு என்று அவரது குடும்பத்தினர் அவரிடம் எப்போதும் கூறி வந்துள்ளனர்.

ஒரு ஜோதிடர் ஒருமுறை PK-வின் தந்தையிடம், அவரது வருங்கால மனைவி தொலைதூர தேசத்திலிருந்து வருவார் என்றும், அவர் இசைத் திறமை கொண்டவராக இருப்பார் என்றும், ரிஷப ராசியில் பிறந்திருப்பார் என்றும், மேலும் "ஒரு காட்டிற்குச் சொந்தக்காரராக" இருப்பார் என்றும் கூறியுள்ளதாக பல்வேறு தகவல்கள் கூறுகின்றன. லோட்டா இந்தியா திரும்பியதும், PK லோட்டாவின் பிறந்தநாளைப் பற்றிக் கேட்டுள்ளார். அவரும் மே மாதத்தில் பிறந்தவர் மற்றும் ரிஷப ராசிக்காரி என்பதை உறுதிசெய்துள்ளார். மேலும், அவர் இசைத் திறமை கொண்டவரா? என்று PK கேட்டுள்ளார். லோட்டவோ பாடல் பாடுவதோடு பியானோவும் வாசிப்பதாக கூறியுள்ளார். பிறகு, மிகவும் விசித்திரமான ஒரு கேள்வி ஒன்றினை PK லோட்டாவிடம் கேட்டுள்ளார். அவருக்கு சொந்தமாக ஒரு காடு இருந்ததா? இதுதான் அந்த கேள்வி. லோட்டா குழப்பமடைந்துள்ளார். ஆனால், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபுவான லோட்டாவின் தாத்தாவிற்கு, கோத்தன்பர்க்கிற்கு அருகில் நிலமும் ஒரு காடும் சொந்தமாக இருந்ததாக பின்னர் அவர் விளக்கியுள்ளார். PK-விற்கு அதுவே போதுமானதாக இருந்தது. அவரே தன் மனைவியாகப் போகிறார் என்று அவரிடம் தன் காதலை கூறியுள்ளார். பல உரையாடல்களுக்குப் பிறகு, அவருடன் ஒரிசாவுக்குச் செல்ல லோட்டா சம்மதித்துள்ளார்.

133 days journey
133 days journey

இவரை சந்திப்பதற்கு முன்பு, லண்டனில் லோட்டா செவிலியராகப் பணிபுரிந்தபோது, ​​ஒடிசாவின் 13-ஆம் நூற்றாண்டு கோனார்க் சூரியக் கோயிலின் பிரம்மாண்டமான கல் சக்கரம் இடம்பெற்றிருந்த ஒரு நாட்காட்டியை அவர் பெற்றுள்ளார். அதே புகைப்படம் PK-வின் வீட்டிலும் இருந்துள்ளது. இதைக்கண்டு அவர் மிகுந்த ஆச்சர்யத்திற்குள்ளானார். பின்னர், லோட்டா தனது வாழ்க்கைத் துணையைச் சந்தித்துவிட்டதாகத் தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதியுள்ளார். பின்னர் இருவரின் திருமணமும் பழங்குடியின முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் சிறிது நாட்கள் கழித்து லோட்டா தனது படிப்பை தொடர ஸ்வீடன் செல்லவேண்டி இருந்தது. அதனால், தன் காதல் கணவரிடம் விடைபெற்றுக்கொண்டு தனது ஊரை நோக்கி சென்றார். ஆனால், காதல் மனைவியை பிரிந்திருக்க PK-வால் முடியவில்லை. தலைவியை பிரிந்த தலைவன் பசலைநோயால் ஆட்கொள்ளப்பட்டதை போல் காதலின் பிரிவில் இருந்துள்ளார் PK. மேலும், கடிதங்கள் வழியாகவே இருவருக்குமான காதல் அன்றைய பொழுதுகளில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. பின்னர், மனைவியிடம் செல்ல வேண்டும் என்ற PK-வின் எண்ணம் மட்டும் உறங்கவே இல்லை.

"ஸ்வீடனுக்கு விமானத்தில் செல்ல பயணச்சீட்டின் விலை எவ்வளவு ஆகும்?" என்று விசாரித்தபோது அது ரூ. 40,000 ஆகும் என்று தெரியவந்துள்ளது. அன்றைய பொழுதில் அது மிகப்பெரிய தொகையாக பார்க்கப்பட்டது. இதனால், 1977 ஜனவரி அன்று ஒரு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு தன் காதலியை காண புறப்பட்டார். அந்நியர்களின் உபசரிப்பாலும், அவர்களுக்கு செய்த உதவிகளின் பிரதிபலிப்பால் கிடைத்த ரயில் டிக்கெட்டுகள், அவர்களின் கலை ஆர்வத்தால் அவர்களை வரைந்தது என்று பல்வேறு நிகழ்வுகள் ஒரு அழகிய காதல் புத்தகத்தை படிக்கும் உணர்வை இவரின் வாழ்க்கை பக்கங்கள் ஒவ்வொன்றும் கொடுக்கிறது. இவரது பயணம் சாதாரணமானதாக இல்லை. இருந்தாலும், அது அந்நியர்களால் அழகாக ஆக்கப்பட்டது. மேலும், அவரது கலை அவருக்கு கை கொடுத்ததோடு அது அவருக்கு பணத்தையும் சம்பாதிக்க உதவியது.

Indian Swedish couple
Indian Swedish couple

இறுதியாக அந்த கடின பயணம் ஒரு இளைப்பாறுதலை தந்தது. ஆம்! இறுதியாக 133 நாட்களுக்கு பிறகு, தனது காதலியின் இடமான கோத்தன்பர்க்கிற்கு சென்றடைந்தார். நீண்ட நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாவில்லை. PK-வோ தனது மனைவியை ஆரத்தழுவி அணைத்து நெடுநேரம் அழுதுள்ளார். பின்பு, லோட்டா தனது பெற்றோருக்கு தனது ஆசை கணவனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் ஸ்வீடிஷ் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, PK ஸ்வீடிஷ் மொழியை கற்றுக்கொண்டு அந்த நாட்டிலேயே கலை ஆசிரியரானார். லோட்டா இசை கற்பிக்க தொடங்கினார். இந்தத் தம்பதியருக்கு 1985-ல் பிறந்த எமிலி மற்றும் 1988-ல் பிறந்த கார்ல் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும், ஒரு அழகான காட்டிற்கு நடுவே, அமைதியான ஒரு கிராமத்தில் இவர்கள் 50 வருடங்களை தாண்டி அதே காதலோடு வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். டெல்லியில் ஒரு சாதாரண வரைபடக்கலை மாணவனாக இருந்து அங்கு பார்த்த வெளிநாட்டு பெண் மீது காதல் கொண்டு, சொற்ப பணத்துடன் கண்டம் விட்டு கண்டம் சைக்கிளில் சென்று காதலியை கண்ட இவர்களை பார்க்கும்போது எந்த தைரியத்தில் இதில் PR இறங்கி இருப்பார் என்ற கேள்வியை, எழுப்பினாலும் இதை படித்து கொண்டிருக்கும் உங்களுக்கே அதற்கான பதில் தெரியும், அது தான் காதல். காதல் எதுவும் செய்யும் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com