தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் கூட வேலைவாய்ப்புச் சந்தையில் கடும் போராட்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இத்தகைய சவாலான பொருளாதாரச் சூழலில், கடந்த ஜனவரி மாதம் வேலையை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது முதல் சம்பளத்தைப் பெற்ற மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அந்த இன்ஜினியர், வேலையில்லாத அந்த மாதங்கள் தமக்கு மிகுந்த மனஉளைச்சலையும், சுய சந்தேகத்தையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வேலை தேடும் அந்த நீண்ட பயணத்தில் இடைவிடாது 'LeetCode', 'system design' மற்றும் பல்வேறு நேர்காணல் பயிற்சிகளில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கடினமான சூழலில் சமூக வலைத்தளங்களில் உள்ள தொழில்நுட்பக் குழுக்களின் ஆலோசனைகளும், ஊக்கமும் தமக்கு பெரிய ஆதரவாக இருந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஜனவரி மாதம் வேலையை பறித்திருக்கலாம், ஆனால் மே மாதம் எனக்கு மீண்டும் நம்பிக்கையைத் தந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எதிர்பார்த்ததை விட சிறந்த நிறுவனத்தில், பெரிய ஊதிய உயர்வுடன் புதிய பணியில் சேர்ந்திருப்பது தமக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக அவர் கூறியுள்ளார்.
அந்த இன்ஜினியர் தனது பதிவில், இந்த சம்பளப் பணம் என்பது வெறும் தொகை மட்டுமல்ல, தொடர் முயற்சியின் வெற்றி என்று கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் தங்களுக்கு நேர்ந்த இதே போன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். சிலர் தாங்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வேலை பெற்றதையும், தங்களுக்கு வந்த ஊதியத்தையும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அந்த இன்ஜினியரிடம் நேர்காணலுக்குத் தயாராவதற்கான ஆலோசனைகளையும், முக்கியமான இணைய வளங்களையும் பல பயனர்கள் கேட்டு வருகின்றனர்.
தன்னுடைய வேலையிழப்புச் சூழலை குடும்பத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ள தயங்கிய அந்த இன்ஜினியர், சமூக வலைத்தளங்களில் இருந்த அநாமதேய ஆதரவு தனக்கு பெரும் உதவியாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பத் துறையில் வேலை தேடும் மற்ற இளைஞர்களுக்கு இந்த பதிவு ஒரு சிறந்த ஊக்கமாக அமைந்திருக்கிறது. கடினமான காலத்திலும் முயற்சியைக் கைவிடாமல் இருந்தால், நிச்சயம் சிறந்த வாய்ப்புகளை அடைய முடியும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.