இந்தியா

யாருதான் பெண்களை வேலைக்கு அமர்த்துவார்? பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் உழைப்பு சுரண்டல்..!

பெண்களுக்கு எதிராக நடக்கும், உழைப்பு மற்றும் உடல் ரீதியிலான சுரண்டலே. இதுபோன்ற ஒரு தீர்ப்புகள் ஒரு நொண்டிச்சாக்குகளே..

மாலை முரசு செய்தி குழு

தேசிய அளவில் மாணவிகளுக்கும், பெண் ஊழியர்களுக்கும் மாதவிடாய்க் கால விடுப்பு வழங்குவதற்கான கோரிக்கையை வலியுறுத்திய பொதுநல வழக்கை ஏற்க மறுத்துள்ளது உச்ச நீதிமன்றம். பெண்களுக்கு 'கட்டாய மாதவிடாய் விடுப்பு' அவர்களின்வேலைவாய்ப்பை மோசமாக பாதிக்கலாம் ஏனெனில் 'நாங்கள் அத்தகைய சட்டத்தை இயற்றினால் முதலாளிகள் பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள்' என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து மகப்பேறு மருத்துவர் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்தி அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், இது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒரு தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இதே நீதிபதி பிப்ரவரி மாதம் இதே போன்ற வேறொரு வழக்கிற்கு தீர்ப்பினை அளித்தார். அதில்,வீட்டுவேலை செய்கின்ற பெண்கள் சட்டத்தின் அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு இடங்களில் வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குதல் மற்றும் அவர்களுக்கு நேரிடும் பிரச்சனை போன்றவற்றிற்காக தொடரப்பட்ட வழக்கிலும் இவர், "இதுபோன்ற விஷயங்களால் பெண்களை யாரும் வீட்டு வேலைக்கு அமர்த்த மாட்டார்கள்" என்ற வாதத்தை முன்வைத்தார். அதனால் இந்த வழக்கை தள்ளுபடியும் செய்து வைத்தார். அதேபோன்றதொரு தீர்ப்பதைத்தான் இந்த மாதவிடாய் விடுப்பிற்கும் இவர் கொடுத்துள்ளார். இந்த மாதவிடாய் விடுப்பு என்பது பெண்களின் நிலையை பின்னோக்கி எடுத்துச் செல்லும். மேலும், பெண்களை எந்த முதலாளிகளும் வேலைக்கு அமர்த்தமாட்டார்கள் என்றும் கூறினார்.

இது குறித்து மருத்துவர் கூறியது, இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்கு சென்று வருகின்றனர். வேலைக்கு மட்டுமின்றி கல்விகற்கவும் அதிகளவில் பெண்கள் செல்கின்றனர். தமிழ்நாட்டில் பள்ளிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம், அதேபோல் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகம். இதுபோன்ற பல துறைகளில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதவிடாயின் போது விடுப்பு வழங்குவது என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விஷயம். குறிப்பாக, மாதவிடாய் காலங்களில் எல்லா பெண்களுக்கும் பிரச்சனை இருக்கப்போவது இல்லை. குறிப்பிட்ட சதவிகிதத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமே மாதவிடாய் சமயத்தில் பிரச்சனை இருக்கும். மேலும், அவர்களில் சிலருக்கு மட்டுமே மாதவிடாய் வலி அதிகமாக இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை 50% பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மாதவிடாயின் போது அதிக உடல்வலியினை அனுபவிக்கின்றனர். அப்போது அதற்கான விடுமுறை என்பதை அவர்கள் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளலாம் என்ற ரீதியில் அதை அணுகுவது நல்லது. அது பெண்களுக்கான உரிமையும் கூட. இது பெண்களை அதிக இடங்களில், வெவ்வேறு துறைகளில் வேலை செய்ய வைக்கும் உந்துகோலாக இருக்கும்.

பெண்களில் சிலரும் கூட, இது எனது தனியுரிமையை பாதிக்கிறது என்றும், இது பெண்களை மிகவும் பலவீனமானவர்களாக காட்டும் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். இதை நாம் பார்க்கும் கோணத்தை மாற்றவேண்டும், அதாவது பெண்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். குழந்தை பெற்றெடுத்தல் போன்ற வேலைகள் ஆண்களுக்கு இல்லை ஆனால், பெண்களுக்கு இருக்கிறது அதனால் இயற்கையாகவே அவர்கள் மாதவிடாயை சந்திக்கவேண்டியுள்ளது. இது இயற்கையாகவே அவர்களுக்கு இருப்பதால், அரசு மற்றும் சமுதாயம் அவர்களுக்கு உதவவேண்டும்.

இந்தியாவில் பீகாரில் 1992ல் மாதவிடாய் விடுப்பினை அமல்படுத்தியுள்ளனர். அதன் பின்பு கேரளாவில், கல்லூரிகளிலும் விடுப்பு அளிக்கப்படுவதாக கூறியுள்ளனர். மேலும் ஒடிசாவிலும் இந்த மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. உலகளாவிய அளவில், ஸ்பெயின், இந்தோனேசிய, ஜப்பான், சாம்பியா மற்றும் தென் கொரியா போன்ற பல நாடுகளில் இந்த மாதவிடாய் விடுப்பை அமலில் கொண்டுவந்துள்ளனர். சிலநாடுகளில், மாதவிடாய் விடுப்பை எடுக்காத பெண்களுக்கு அதை கூடுதல் வேலை நேரமாக (over time) கணக்கில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படுகிறது. அப்போது, வலி இல்லாதவர்களும் தேவையில்லாமல் இந்த மாதவிடாய் விடுப்பை எடுப்பார்கள் என்ற வாதம் உடைகிறது. இது அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இருக்கும். வலியில் இருப்பவர்கள் வரவில்லை என்றாலும் வலி இல்லாதவர்கள் கண்டிப்பாக வேலைக்கு வருவார்கள் என்றும் அதற்காக அவர்களுக்கு கூடுதல் சம்பளமும் வழங்கப்படும் போது அது அவர்களுக்கு உற்சாகமாகவே இருக்கும் என்கிறார் மருத்துவர்.

இந்திய நாடாளுமன்றத்தில் 2017ல் மாதவிடாய் சலுகை மசோதாவினை கொண்டுவந்தனர். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. 2018லும் பெண்கள் பாலியல், இனப்பெருக்கம் மற்றும் மாதவிடாய் உரிமைகள் மசோதா கொண்டுவரப்பட்டது, ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. 2022லும் மசோதாக்கள் வந்து நிறைவேற்றப்படாமல் போயிருக்கிறது. தொடர்ந்து பெண்களுக்கென்று இதுபோன்ற மசோதாக்கள் கொண்டுவரப்பட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், கர்நாடக மாநிலத்தில் அரசாங்கம் மற்றும் தனியார் பணியிடங்களிலும் மாதவிடாய் காலங்களுக்காக விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டது. அங்கு இந்த மசோதா நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

பெண்கள் அதிகளவில் கல்வி கற்று வேலைக்கு வரவேண்டும். தொழிற்சாலைகளில் அவர்களும் வேலைசெய்யவேண்டும், மேலும் அவர்களது பொருளாதாரப் பங்கு உயரவேண்டும். அவர்களுக்கென்ற சமூக பொருளாதார பாதுகாப்பு உயரவேண்டும். சமுதாய ரீதியாக அவர்கள் தற்சார்பு பெற்று உயரவேண்டும், அதற்கு அரசும், சட்டமும் அவர்களுக்கு துணை நிற்கவேண்டும். அதெற்கென்ற கொள்கைகள் வகுக்கப்படவேண்டும் என்று நாம் பேசிக்கொண்டிருக்கக்கூடிய வேளையில் இதுபோன்ற தீர்ப்புகள் வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. இது முதலாளிகளில் பார்வையிலேயே உள்ளது. மேலும் இது போன்ற தீர்ப்புகள் முதலாளிகளுக்கு சாதகமாகவே உள்ளது.

மாதவிடாய் விடுப்பு ஏன் முக்கியம்:

இளம்வயதினருக்கு அதிகப்படியான உடல்வலிகள் மாதவிடையினால் ஏற்படுகிறது.இது மட்டுமின்றி அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் அவர்களால் வேலைக்கு வரமுடியாது என்ற சூழல் ஏற்படுகிறது. இதனால் ஊதிய குறைவும் ஏற்படுகிறது. மருத்துவசான்றிதழ் இல்லாத இந்த விடுப்பிற்கு மாதம் ஒருநாள் கூடுதலாக விடுப்பு எடுக்கலாம் என்ற ஒரு நிலை அப்பெண்ணுக்கு ஒரு உத்வேகமாகவே அமையும். குறிப்பாக, மாதவிடாயின் போது அதிக வலி ஏற்பட்டால் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம், அதனால் பெரிய விளைவுகள் ஏற்படாது என்பதே ஒரு ஆதரவாக பெண்களுக்கு அமையும். மேலும், இது போன்ற மாதவிடாய் விடுப்புகள், பெண்களை வேலைக்கு வரவைப்பதில் முக்கியபங்காற்றுகிறது. மாதவிடாய் காலங்களில் அதிக வலியால் அவதியுறும் பெண்களை, சோர்வடைய செய்யாமல் வேலைக்கு அவர்களும் வரலாம் என்ற ஆதரவு கரத்தினை நீட்டுகிறது. முக்கியமாக துணிக்கடைகளில் அதிக நேரம் பெண்கள் நின்ற வண்ணமே வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அதனால் மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கு அதிக வலி மற்றும் உடல் உபாதைகள் ஏற்படும். இந்த மாதவிடாய் விடுப்பு அவர்களுக்கு தேவையான ஒரு உரிமையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் பெண்கள் ஆர்வமாக வேலைக்கு வருவார்கள்.

மேலும், அவர்களது வீட்டின் பொருளாதாரம், அவர்களின் தனிப்பட்ட பொருளாதாரம் ஆகியவை உயர்கிறது. மேலும், இதனால் பெண்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும், பொருளாதார தன்னிறைவு வரும், சமுதாயத்திற்கும் இது நன்மை பயக்கும். இதனால் பெண்களை பணியமர்த்தமாட்டார்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல, ஏனென்றால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அரசு நிறுவனங்களில் இருந்தது. ஆனால் தற்போது அது 40%மாக, திமுக அரசு உயர்த்தியுள்ளது. ஆகவே, பெண்களுக்கு வேலைவாய்ப்பினையும் உறுதிப்படுத்தி, அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு போன்ற அத்தியாவசியமான விடுப்புகளை வழங்குவது போன்ற முன்னுதாரணமாக மாநிலமாக தமிழ்நாடு இருந்துவருகிறது. அதனால், மாதவிடாய் விடுப்பு போன்றவற்றை தமிழ்நாடும் அமலுக்கு கொண்டுவரவேண்டும்.

மேலும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான உரிமைகளை நிறைவேற்றுவதற்கு பெண் எம்.பிகள் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. ஏனென்றால் மூன்று முறை சட்டமசோதாக்கள் கொண்டுவரப்பட்டு அமலுக்கு வரமாலேயே இருந்திருக்கிறது. இதற்கு காரணம் பெண்கள் அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதே. மேலும், பெண்களுக்கான முடிவு எடுப்பதில் அவர்களின் பங்கு இருக்கவேண்டும். பெண்களுக்கான கொள்கைகள் மற்றும் நிதி நிலையை அறிவிக்கவேண்டும். இதுபோன்று, பெண்களுக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் அவர்களை முன்னிலை படுத்தவேண்டும்.

பெண்களுக்கு இது பாதகமாக அமையுமா?

இது போன்ற நீதிபதிகளின் தீர்ப்புகள் பெண்களுக்கு சாதகமாக இருப்பது போன்று தெரிந்தாலும், இது ஒரு ஆணாதிக்கப்போக்கே ஆகும். பெண்கள் குழந்தைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும், மனிதகுல வளர்ச்சியில் பங்காற்றவேண்டும், ஆனால் அதற்காக ஏற்படும் இந்த இயற்கை மாற்றங்களை கருத்தில் கொண்டு உதவுவதற்கு சமுதாயமும், இந்த அமைப்பு முறையும் உதவுவதில்லை. இவர்களுக்கு அரசாங்கமும், சட்டமும் எந்தவிதத்திலும் உதவாமல் இருப்பது ஓர் ஆணாதிக்க போக்கின் மனநிலையும் ஓர் காரணமே. இது பெண்களுக்கு எதிராக நடக்கும், உழைப்பு மற்றும் உடல் ரீதியிலான சுரண்டலே. இதுபோன்ற ஒரு தீர்ப்புகள் ஒரு நொண்டிச்சாக்குகளே. பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களுக்கு இது போன்ற மாதவிடாய் விடுப்புகள் வழங்குவது, அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பை வழங்குவது போன்றவை பெண்களை இன்னும் தொழில் சார்ந்த இடங்களுக்கு வர ஊக்குவிக்கும். இதன் மூலமாக இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்பதே நிதர்சனமான உண்மை. பல இடங்களில் பெண்களை வேலைக்கு எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில், அவர்களுக்கு பொறுப்புணர்வு, நேரம் தவறாமை, ஆளுமைத்திறன் அதிகம் போன்ற திறன் அவர்களுக்கு இயல்பிலேயே அதிகம் என்பதால், அவர்களை அதிகமாக வேலைக்கு அமர்த்த முன்வருகின்றனர்.

தற்போது இதுபோன்ற பிற்போக்கான, மாதவிடாய் விடுப்பு தேவையில்லாதது போன்ற தீர்ப்புகள் அவர்களை பின்னோக்கி இழுக்குமே தவிர்த்து அவர்களுக்கு எவ்வகையிலும் உதவாது என்று மருத்துவர் சாந்தி தனது கருத்துக்களை முன்வைத்தார். பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிசெய்கிறோம் என்ற பெயரில் அவர்களை பின்னோக்கி இழுக்காமல் இருப்பதே சிறந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.