“அரசு வேலை கிடைத்தால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?” என்ற கேள்விக்கு, மும்பையில் வேலை செய்து வரும் சலூன் கடைக்காரர் ஒருவர் வித்தியாசமான பதிலை கொடுத்துள்ளார். மாதம் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் நிலையில், அரசு வேலை வாய்ப்பு கிடைத்தாலும் அதை ஏற்க மாட்டேன் என்று அவர் கூறியதாக வெளியான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அவருக்கு முக்கியமானது சம்பளம் மட்டுமல்ல; தான் செய்யும் வேலையில் இருக்கும் சுதந்திரம்தான்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் பகுதியைச் சேர்ந்த இந்த நபர் தற்போது மும்பையில் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார். செயலி மூலம் வீட்டுக்கே சென்று சேவை வழங்கும் முறையில் அவர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. வாரத்தில் ஆறு நாட்கள், காலை முதல் இரவு வரை வேலை செய்து வருகிறார். தினசரி பயணச் செலவுகள் உள்ளிட்ட அடிப்படை செலவுகளை கழித்த பிறகு, மாதத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரை சந்தித்தபோது, “உங்களுக்கு அரசு வேலை கிடைத்தால் இந்த வேலையை விட்டுவிட்டு செல்வீர்களா?” என்று கேட்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு அவர், அரசு வேலை கிடைத்தாலும் ஏற்கப் போவதில்லை என்று தெளிவாக கூறியுள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம்தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தற்போது செய்து வரும் வேலையில் தனக்கான சுதந்திரம் இருப்பதாகவும், தனது உழைப்புக்கு ஏற்ப வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடிவதாகவும் அவர் நம்புகிறார். அரசு வேலை என்றாலே நிரந்தர வருமானம், வேலை பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல நன்மைகள் நினைவுக்கு வரும்.
ஆனால் இந்த தொழிலாளியின் பார்வை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. “வாய்ப்புகளுக்கு குறைவில்லை; உழைக்க வேண்டும்” என்பதே அவரது அணுகுமுறையாக உள்ளது. தனக்கு பிடித்த தொழிலை செய்து கொண்டே வருமானம் ஈட்டுவது, ஒரு குறிப்பிட்ட பணிச்சூழலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது ஆகியவை அவருக்கு முக்கியமாக இருப்பதாக தெரிகிறது.
அவரது சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியையும் அவர் பாராட்டியதாக கூறப்படுகிறது. முன்பு தனது கிராமத்தில் இருந்து லக்னோ செல்ல ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை பயணம் செய்ய வேண்டியிருந்ததாகவும், தற்போது சாலை வசதிகள் மேம்பட்டுள்ளதால் அதே நேரத்திற்குள் சென்று திரும்பிவிட முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பயணத்தின் போது உணவு மற்றும் தேநீருக்காக இடையில் நிறுத்தினாலும் கூட இந்த பயண நேரத்தை சமாளிக்க முடிவதாக கூறியுள்ளார். குடும்ப வாழ்க்கையிலும் தனது வருமானத்தை அவர் பயன்படுத்தி வருகிறார்.
அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், குழந்தையை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியும் குடும்ப வருமானத்துக்கு உதவி செய்து வந்துள்ளார். ஆனால் குழந்தை சிறியதாக இருப்பதால் தற்போது அவர் வேலைக்கு இடைவெளி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மற்றொரு விஷயமும் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது வருமானத்துக்கு வரி செலுத்தி வருவதாக அந்த தொழிலாளி கூறியுள்ளார். அவரது வருமானத்தில் இருந்து TDS பிடித்தம் செய்யப்படுவதாகவும், அதனால் முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் வருமான வரி திரும்பவும் கிடைப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியான பிறகு, பலரும் gig economy குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாக பெறும் தொழிலாளர்களுக்கு பாரம்பரிய வேலை முறைகளை விட வேறு வகையான வருமான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். வீட்டுக்கே சென்று முடிதிருத்துதல், மின்சாதனங்கள் பழுது பார்க்குதல், ஏசி பொருத்துதல், டெலிவரி உள்ளிட்ட பல துறைகளில் இதுபோன்ற வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் gig workers எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொருளாதார ஆய்வறிக்கையின் அடிப்படையில், 2020-21 நிதியாண்டில் சுமார் 77 லட்சமாக இருந்த gig workers எண்ணிக்கை, 2024-25 நிதியாண்டில் 1.20 கோடியாக உயர்ந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், வழக்கமான அலுவலக வேலைகளுக்கு வெளியேயும் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவது தெரிய வருகிறது. மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே இந்த சம்பவம் பேசப்படவில்லை.
“அரசு வேலைதான் சிறந்த வேலை” என்ற பொதுவான எண்ணத்துக்கு மாறாக, தனக்கு பிடித்த தொழிலில் சுதந்திரமாக செயல்பட்டு அதன்மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்பதை அந்த தொழிலாளி தனது வாழ்க்கை மூலம் காட்டியுள்ளார். வேலை எதுவாக இருந்தாலும், அதில் திறமை, உழைப்பு மற்றும் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவது முக்கியம் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்