இந்தியா

ஆய்வகத்தில் இருக்கும் AI யோசனைகள்.. இனி நிறுவனங்களாக மாறுமா? ஐஐடி மெட்ராஸின் புதிய முயற்சி

கல்வித்துறையைச் சேர்ந்த தொழில் தொடங்குபவர்கள் மற்றும் வெளியில் இருந்து வரும் தொழில்முனைவோரும் விண்ணப்பிக்கலாம்

Mahalakshmi Somasundaram

ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்படுவதுடன் அதன் பயணம் முடிந்துவிடுவதில்லை. அதை உண்மையான பிரச்சினைக்கு பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்ற வேண்டும். அதற்கு பிறகு அந்த பொருளை சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டு கட்டங்களுக்கிடையே இருக்கும் இடைவெளியை குறைக்கும் வகையில், IIT மெட்ராஸ் புதிய முயற்சியை தொடங்குகிறது. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோரிடம் இருக்கும் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவு அறிவியல் சார்ந்த யோசனைகளை புதிய நிறுவனங்களாக மாற்றுவதற்காக ‘AI Studio’ என்ற புதிய மையம் தொடங்கப்பட உள்ளது.

ஐஐடி மெட்ராஸின் Wadhwani School of Data Science and AI சார்பில் இந்த மையம் தொடங்கப்படுகிறது. இந்த முயற்சி இந்த வாரத்திலேயே தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் விண்ணப்பப் பதிவு அக்டோபர் 3, 2026 அன்று தொடங்க உள்ளது. வழக்கமான கல்லூரி திட்டங்களைப் போல மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என்பது இந்த முயற்சியின் முக்கிய அம்சமாக உள்ளது.

ஐஐடி மெட்ராஸ் மற்றும் Wadhwani School of Data Science and AI-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, மற்ற கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்வித்துறையைச் சேர்ந்த தொழில் தொடங்குபவர்கள் மற்றும் வெளியில் இருந்து வரும் தொழில்முனைவோரும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே ஒரு AI அல்லது இயந்திரக் கற்றல் சார்ந்த தொழில் தொடங்கியிருப்பவர்களும், இன்னும் யோசனை நிலையில் இருப்பவர்களும் இதில் பங்கேற்க முடியும். இந்த திட்டத்தில் சேரும் அனைவரும் ஒரே நேரத்தில் முழுமையான திட்டத்துக்குள் செல்ல மாட்டார்கள். முதலில் அதிகமான விண்ணப்பதாரர்களை உள்ளடக்கிய பயிற்சி மற்றும் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறும். அதன் பிறகு, அந்த கட்டத்தை முடித்தவர்களில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழுக்கள் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் குழுக்கள்தான் முழுமையான AI Studio திட்டத்தில் அடுத்த கட்டத்துக்கு செல்லும்.

தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கு சுமார் ஆறு மாதங்கள் தொடர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். அந்த காலத்தில் அவர்களின் யோசனை வெறும் தொழில்நுட்பமாக இருக்கிறதா அல்லது உண்மையில் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயன்படும் பொருளாக மாற முடியுமா என்பது பரிசோதிக்கப்படும். திட்டம் நல்ல நிலையில் முன்னேறி, நிறுவனத்துக்கான முதலீட்டை திரட்டும் கட்டத்தை நெருங்கினால், மேலும் மூன்று மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படலாம். ஆண்டுக்கு இரண்டு குழுக்கள் தேர்வு செய்யப்படும் வகையில் இந்த திட்டம் செயல்பட உள்ளது. ஒரு யோசனை நல்லதாக இருப்பது மட்டும் ஒரு நிறுவனத்தை உருவாக்க போதாது. அதை உருவாக்க கணினி வசதிகள், தரவு, ஆய்வக வசதிகள், பணம், சந்தை பற்றிய புரிதல் மற்றும் அனுபவம் தேவை. இதை கருத்தில் கொண்டு AI Studioவில் தேர்வு செய்யப்படும் குழுக்களுக்கு பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட உள்ளன. தொடக்கநிலை நிதி, கணினி பயன்பாட்டுக்கான சேவைகள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், தரவு மற்றும் ஆராய்ச்சி வளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

அதோடு, தொழில்முனைவு குறித்த பயிற்சியும் வழங்கப்படும். அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள், தொழில் தொடங்குபவர்களுக்கான ஆலோசகர்கள் மற்றும் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்கள் ஆகியோரின் உதவியும் கிடைக்கும். இதன் மூலம் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அந்த தொழில்நுட்பத்துக்கு சந்தையில் உண்மையான தேவை இருக்கிறதா என்பதையும் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு புதிய AI கருவியை உருவாக்கியிருக்கலாம். அது தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தாலும், அதை யார் பயன்படுத்துவார்கள், அவர்கள் எந்த பிரச்சினையை தீர்க்க இதை பயன்படுத்துவார்கள், அதற்காக பணம் செலுத்துவார்களா போன்ற கேள்விகளுக்கு பதில் தேவைப்படும். AI Studio இந்த பகுதிகளிலும் குழுக்களை வழிநடத்தும். அதாவது, ஆராய்ச்சி முடிவிலிருந்து தயாரிப்பு உருவாக்கம், அங்கிருந்து முதலீடு பெறும் நிலை என அடுத்தடுத்த படிகளுக்கு செல்லும் பாதையை உருவாக்குவதே இதன் நோக்கம்.

இதில் ஐஐடி மெட்ராஸ் ஆய்வகங்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வெளியில் இருந்து வரும் தொழில்முனைவோர், கல்வி நிறுவனத்தில் ஏற்கனவே இருக்கும் ஆராய்ச்சி வசதிகளையும் நிபுணர்களின் அறிவையும் பயன்படுத்த முடியும். அதே நேரத்தில், ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள் தொழில்துறையின் தேவைகளுடன் இணையும் வாய்ப்பும் உருவாகும். ஒரு குறிப்பிட்ட கட்டத்தை வெற்றிகரமாக கடக்கும் நிறுவனங்களுக்கு ஐஐடி மெட்ராஸ் சார்ந்த நிறுவனமாக அடுத்த கட்டத்துக்கு செல்லும் வாய்ப்பும் இருக்கும். இதன் மூலம் ஆரம்பத்தில் ஒரு ஆராய்ச்சி யோசனையாக இருந்த முயற்சி, பின்னர் தயாரிப்பாகவும், அதன்பிறகு தனி நிறுவனமாகவும் வளரக்கூடிய சூழல் உருவாகும்.

ஐஐடி மெட்ராஸின் ஏற்கனவே உள்ள ஆழமான தொழில்நுட்ப நிறுவன வளர்ப்பு சூழலுடன் இந்த புதிய AI Studioவும் இணைக்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் தகவல்படி, அதன் ஆழமான தொழில்நுட்ப நிறுவன வளர்ப்பு அமைப்பு இதுவரை நூற்றுக்கணக்கான புதிய நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும், 11,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு துறையில் உலக அளவில் வேகமான மாற்றங்கள் நடந்து வரும் நிலையில், இந்தியாவிலும் பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. ஆனால் ஒரு பல்கலைக்கழகத்தில் உருவாகும் ஆராய்ச்சியை நேரடியாக தொழிலாக மாற்றுவது இன்னும் சவாலான பணியாகவே உள்ளது. அந்த சிக்கலை சமாளிக்க ஆராய்ச்சி, தொழில்நுட்ப வசதி, தொழில்முனைவு பயிற்சி மற்றும் ஆரம்ப முதலீடு ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைக்கும் முயற்சியாக இந்த AI Studio அமைகிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உருவாகும் AI ஆராய்ச்சிகள் ஆய்வுக் கட்டுரைகளாக மட்டும் இல்லாமல், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய புதிய தயாரிப்புகளாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், வெளியில் இருக்கும் தொழில்முனைவோருக்கும் உயர்தர ஆராய்ச்சி வசதிகளுடன் இணைந்து புதிய AI நிறுவனங்களை உருவாக்குவதற்கான கதவு திறக்கப்படுகிறது. இந்த முயற்சி எத்தனை புதிய நிறுவனங்களை உருவாக்கும் என்பதையும், அவற்றில் எத்தனை நிறுவனங்கள் நீண்ட காலம் வளர்ச்சி பெறும் என்பதையும் அடுத்தடுத்த ஆண்டுகளில்தான் பார்க்க முடியும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்