இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து 2வது முறையை டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா தனது மூன்றாவது உலகக்கோப்பை மகுடத்தைச் சூடியது. இந்தியாவே கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் வேளையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் அகமது ஷெஷாத் இந்திய அணியின் வளர்ச்சியையும் தங்களது அணியின் வீழ்ச்சியையும் ஒப்பிட்டுப் பேசி வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
பாகிஸ்தானின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அகமது ஷெஷாத், இந்திய கிரிக்கெட் கட்டமைப்பை வெகுவாகப் பாராட்டினார். "பாகிஸ்தானில் திறமைக்குக் பஞ்சமில்லை, ஆனால் நம்மிடம் சரியான கட்டமைப்பு இல்லை. இந்தியாவிடம் திறமையும் இருக்கிறது, அதை வளர்க்கும் கட்டமைப்பும் இருக்கிறது. அதற்குச் சான்றுதான் இன்றைய வெற்றி," என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, இந்திய அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்புக்காகக் காத்திருந்த சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள், உலகக்கோப்பை போன்ற பெரிய மேடையில் மேட்ச்-வின்னர்களாக மாறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். சஞ்சு சாம்சன் இந்தத் தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டதை அவர் ஒரு மிகப்பெரிய பாடமாக முன்வைத்தார்.
தனது ஆத்திரத்தை வெளிப்படுத்திய ஷெஷாத், "நமது அணி ஜிம்பாப்வே, உகாண்டா அல்லது கென்யா போன்ற சிறிய அணிகளைத் தங்களது நாட்டிற்கு வரவழைத்து, அவர்களைத் தோற்கடித்துவிட்டு பெரிய சாதனையைப் படைத்துவிட்டது போலக் கொண்டாடுகிறது. இதுதான் உங்கள் லெவலா? ஆனால் இந்தியா அப்படியல்ல. அவர்கள் பெரிய அணிகளுக்கு எதிராக, பெரிய தொடர்களில், அழுத்தமான சூழலில் விளையாடி ஜெயிக்கிறார்கள். இதனால்தான் அவர்களால் இன்று உலகக்கோப்பையைத் தக்கவைக்க முடிந்துள்ளது," என்று அவர் மிகக் காட்டமாகத் தெரிவித்தார். இந்திய அணியின் இந்த அபாரமான வளர்ச்சிக்கு அவர்களது உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பே காரணம் என்றும் அவர் கூறினார்.
இறுதிப்போட்டியில் இளம் வீரர் அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தையும் அவர் பாராட்டியுள்ளார். "இறுதிப்போட்டி என்றாலே பெரிய வீரர்களுக்குக் கூட அழுத்தம் இருக்கும். ஆனால் 21 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அபிஷேக் சர்மா காட்டிய அதிரடி, இந்திய அணியின் துணிச்சலைக் காட்டுகிறது. சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தபோதும், அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் தங்களை நிரூபித்துவிட்டு வந்து இன்று உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளனர். ஒழுக்கம் மற்றும் தகுதியின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்யும் இந்தியாவின் அணுகுமுறை தான் அவர்களை முதலிடத்தில் வைத்துள்ளது," என்று அவர் பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.