

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், தான் ஒரு "மேட்ச் வின்னர்" என்பதை உலகக்கோப்பை மேடையில் நிரூபித்துக் காட்டியுள்ளார். காலிறுதிக்கு இணையான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 97* ரன்கள், அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்கள், மற்றும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் எனத் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன் மீதான விமர்சனங்கள் மற்றும் Inconsistency என்ற கேலிப் பேச்சுகளைத் தனது பேட்டின் மூலம் சஞ்சு சாம்சன் அடித்து நொறுக்கியுள்ளார்.
சஞ்சுவின் இந்த அசுர வளர்ச்சியைப் பார்த்து வியந்த விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "தொடர் நாயகன் விருதுக்கு முழு தகுதியானவர் சஞ்சு சாம்சன். மிக முக்கியமான தருணங்களில் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். உங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் செட்டா (Chetta)" என்று பதிவிட்டுள்ளார். சஞ்சு இந்தத் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் குவித்து, 80.25 சராசரி மற்றும் 199.37 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அசத்தியுள்ளார். இதில் 27 பவுண்டரிகளும் 24 சிக்ஸர்களும் அடங்கும்.
இந்தத் தொடரின் மூலம் 2014 உலகக்கோப்பையில் விராட் கோலி படைத்த 319 ரன்கள் என்ற சாதனையைச் சஞ்சு முறியடித்துள்ளார். இருப்பினும், பாகிஸ்தான் வீரர் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் 383 ரன்கள் எடுத்து இந்தத் தொடரின் அதிகபட்ச ரன் குவித்தவராக முதலிடத்தில் உள்ளார். ஆனாலும், ஒரே உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையைச் சஞ்சு தன்வசப்படுத்தியுள்ளார். மேலும், உலகக்கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆகிய இரண்டிலும் அரைசதம் அடித்த விராட் கோலி மற்றும் ஷாகித் அப்ரிடி ஆகியோரின் எலைட் பட்டியலில் சஞ்சுவும் இணைந்துள்ளார்.
இறுதிப்போட்டியில் சஞ்சு எடுத்த 89 ரன்கள், உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக மார்லன் சாமுவேல்ஸ் (85*) மற்றும் கேன் வில்லியம்சன் (85) ஆகியோர் எடுத்த ரன்களையும் சஞ்சு முந்திக் காட்டியுள்ளார். அத்துடன் மகேலா ஜெயவர்த்தனே, பாபர் அசாம், கே.எல்.ராகுல் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.
நேற்றைய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. ஆனால், ஃபார்முக்கு திரும்பிய அபிஷேக் சர்மா (21 பந்துகளில் 52) மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்து நியூசிலாந்தின் முடிவைத் தவறென நிரூபித்தது. பின்னர் இஷான் கிஷனுடன் (25 பந்துகளில் 54) ஜோடி சேர்ந்த சஞ்சு, இந்தியாவை 16-வது ஓவரிலேயே 200 ரன்களைக் கடக்க வைத்தார். இறுதியில் ஷிவம் துபே 8 பந்துகளில் 26 ரன்கள் விளாச, இந்தியா 255/5 என்ற இமாலய இலக்கை எட்டியது. இது உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் பதிவான அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
256 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அக்சர் படேல் (3/23) மற்றும் ஜஸ்பிரித் பும்ரா (4/15) ஆகியோரின் அனல் பறக்கும் பந்துவீச்சால் அந்த அணி 72 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. டிம் சீஃபர்ட் (52) மற்றும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் (43) ஆகியோர் ஓரளவுக்குப் போராடினாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 159 ரன்களுக்கு நியூசிலாந்து சுருண்டதால், இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.