Vijay Government 100 Days 
தமிழ்நாடு

“ஆட்சி கவிழும்.. காகிதக் கப்பல் என்றார்கள்!” 100 நாட்களை கம்பீரமாக கடந்த தவெக அரசு.. சட்டப்பேரவையில் சபாநாயகர் புகழாரம்!

இந்த பொற்கால அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்களை கம்பீரமாக நிறைவு செய்கிறது.

Vinvizhi Leninton

4 நாட்கள் விடுமுறையை அடுத்து, இன்று சட்டப்பேரவை கூடியது. மேலும், புதிய அரசு ஆட்சி பதவி ஏற்று 100 நாட்கள் ஆனதை தொடர்ந்து சபாநாயகர் பாராட்டி வாழ்த்தி பேசினார். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கை தலைவர்களாக ஏற்று 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உன்னத கோட்பாட்டை தனது அரசியல் சித்தாந்தமாக கொண்டு மதசார்பற்ற சமூக நீதியை காக்கும் உண்மையான மக்கள் தலைவர் மாண்புமிகு முதலைமைச்சரின் தலைமையில் அமைந்துள்ள இந்த பொற்கால அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்களை கம்பீரமாக நிறைவு செய்கிறது என்று பேசினார்.

அரசின் இந்த முதல் 100 நாட்கள் என்பது நாட்காட்டியில் கடந்து செல்லும் சாதாரண நாட்கள் அல்ல. இது தமிழக வரலாற்றின் புதியதொரு மாற்றத்தின் முதல் 100 நாட்கள் ஆகும். வாக்குறுதி என்பது தேர்தலுக்காக வாக்குறுதிகள் அல்ல. அது மக்களுக்கான பொறுப்பு என்று பொறுப்புடன் செயல்படும் இந்த அரசு மக்களின் பேராதரவோடு பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே மக்களின் நாடிதுடிப்பினை அறிந்து புதிய சிந்தனைகளுடன் களமிறங்கி தனது முதல் 100 நாட்களில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தியுள்ள பணிகள் பாராட்டுக்குரியவை. ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையிலும், இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கபெண்கள் சிறப்பு அதிரடி படை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் வரையிலான இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள சுமார் 1000, 1000 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி, வீடற்ற மக்களுக்கு தரமான வீடுகளை கட்டித்தரும் நோக்கில் வெற்றி வீடுகட்டும் திட்டம், அண்ணன் சீர் திட்டம், வெற்றி திறன் பயிற்சி திட்டம், தாய் மாமன் தங்க மோதிர திட்டம் என்று பல அறிவிப்புகள் மூலம் இது மக்களுக்கான அரசு என்று முதல்வர் நிரூபித்துள்ளார், என்று தனது உரையில் அவர் பேசினார்.

வளமான தமிழ்நாடு, வலிமையான தமிழ்நாடு, சமத்துவமான தமிழ்நாடு, ஊழலற்ற தமிழ்நாடு என்ற எதிர்கால கனவிற்கு முதல் 100 நாட்களில் வலுவான அடித்தளத்தை அமைக்கும் வகையில் ஆட்சி கட்டிலின் ஏறிய உடனே விளம்பர வெளிச்சத்தை தேடாமல் ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் கோப்புகளில் கையெழுத்திட்ட அந்த பொன்னான கரம் முதலமைச்சருடையது என்று புகழ்ந்து பேசினார். அரசு பொறுப்பு ஏற்றத்தில் இருந்து அரசியல் அனுபவம் இல்லாதவர்கள், ஆட்சி கவிழ்ந்துவிடும், இது காகித கப்பல் என்று ஏளனமாக பேசியவர்களுக்கு மத்தியில் மக்களின் ஆதரவில் திக்குத் தெரியாமல் தத்தளிக்கும் கட்சியை பார்த்துக் கொண்டிருப்பதாக சபா நாயகர் பேசினார். சட்டமன்றத்தில் மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் இன்முகத்தோடு, அரசியல் காழ்புணர்ச்சிக்கு இடம் தராமல், ஜனநாயகம் மற்றும் சட்டமன்ற மரபுகளை புதுப்பித்து அரசியலில் ஒரு புதிய நாகரிகமான பண்பை கடந்த 100 நாட்களில் கண்டதாக அவைத்தலைவர் பேசினார்.

திரை உலகிலும், மக்கள் உலகிலும் தொட்டதெல்லாம் துளங்கச்செய்து 100 நாள் சாதனை கடந்து நூற்றாண்டுகள் போற்றும் சாதனைகள் படைக்கப்போகிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று அவைத்தலைவர் புகழ்ந்து பேசினார். "இன்னும் 100 ஆண்டு சாதனை படைத்து பகைவரின் சூழ்ச்சிகளை தூள் தூளாக்கி மக்கள் படைப்பலத்தில் என்றும் வெல்வாயாக!" என்று வரிகளுக்கேற்ப பல சாதனைகளை படைக்கவேண்டும் என்று முதல்வர் விஜய் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் இன்று கூடிய சட்டமன்றத்தில் வாழ்த்திப் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்