தமிழ்நாடு

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. 94.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை! முதல் 3 இடங்களை பெற்ற மாவட்டங்கள்?

மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.47% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.15% ஆகவும் உள்ளது.

Muthu Lakshmi

தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 94.31% என சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை விட உயர்ந்துள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.

இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,09,002 மாணவர்கள் எழுதியிருந்தனர். இதில் 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை 11,174 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டும் மாணவிகள் மாணவர்களை விட அதிக தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களில் 94.31% தேர்ச்சி பெற்றுள்ளனர், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.47% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.15% ஆகவும் உள்ளது. மாணவிகளை விட மாணவர்கள் 4.32% குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 10ம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதில் கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 93.80% ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 0.51% உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பாடவாரியாக தேர்ச்சி விகிதங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி: தமிழ் – 98.43%, ஆங்கிலம் – 99.44%, கணிதம் – 97.36%, அறிவியல் – 98% மற்றும் சமூக அறிவியல் – 97.93% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்சமாக அறிவியல் படத்தில் 10,476 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். மேலும் தமிழ் - 34, ஆங்கிலம் - 92, கணிதம் - 3,194, சமூக அறிவியல் - 3,336 மாணவர்களும் 100 மதிப்பெண் பெற்று அசதியுள்ளனர். மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர் பள்ளிக்கல்வி துறை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் சிவகங்கை மாவட்டம் 97.54% பெற்றும், மூன்றாம் இடத்தில் தஞ்சாவூர் மாவட்டம் 97.41% பெற்றும் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் 86.58% தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.86% ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பல பள்ளிகளில் மாணவர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். கல்வித்துறையினரும் இந்த ஆண்டு தேர்ச்சி விகித உயர்வை வரவேற்றுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.