தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் 2025-2026 கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC) முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6, 2026 வரை நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றிருந்தனர். மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்த்து அறிந்து கொள்ளலாம்:
www.tnresults.nic.in
www.dge.tn.gov.in
results.digilocker.gov.in
தேர்வு முடிவுகளை அறிய, மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளிலும் நேரடியாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இதனுடன், பள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கும், தேர்வர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கும் SMS மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதன்முறையாக WhatsApp மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் 7845252525 என்ற எண்ணை தங்கள் மொபைலில் சேமித்து வைத்து, WhatsApp-ல் “Hi” என்று அனுப்ப வேண்டும். பின்னர் வரும் வழிமுறைகளை பின்பற்றி தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால், தேர்வு முடிவுகளை WhatsApp-லேயே பெற முடியும்.
மேலும் தேர்வு முடிவுகள் தொடர்பான சந்தேகங்களுக்கு 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற SSLC தேர்வில் மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.80 சதவீதமாக இருந்தது. அதில் மாணவிகள் 95.88 சதவீத தேர்ச்சி பெற்று முன்னிலை வகித்தனர். மாணவர்கள் 91.74 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அதேபோல் 2024-ல் 91.55%, 2023-ல் 91.39% மற்றும் 2022-ல் 90.07% தேர்ச்சி விகிதம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மாணவர்கள் தேர்வு முடிவுகளை அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்றும், மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிப்பதில்லை என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இன்று வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் "ஆலோசனை பெற '14416' மற்றும் '104' ஆகிய எண்களை மாணவர்கள், பெற்றோர் தயங்காமல் தொடர்பு கொள்ளலாம். மனநல நிபுணர்கள் கொண்டு ஆலோசனை வழங்கப்படவுள்ளது” என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.