அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பூசல் நிலவி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செப் -5 மனம் திறப்பதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று தனது வீட்டில் இருந்து ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஊர்வலமாக சென்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் “ஏழை எளிய மக்களுக்காக, மாணவர்களுக்காக, உழைப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி தான் அதிமுக, அம்மாவின் மறைவிற்கு பிறகு அனைவரும் ஒருமனதாக சசிகலா அவர்களை தேர்ந்தெடுத்தோம். மீண்டும் ஒரு சூழ்நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது, இரண்டு முறை எனக்கு வாய்ப்பு இருந்தும் கட்சியின் ஒற்றுமைக்காக நான் எனது நிலைப்பாட்டில் இருந்து கட்சிக்காக பணியாற்றி வந்தேன். 2017 க்கு பிறகு வந்த தேர்தலில் களத்தில் சில பிரச்சனைகளை நாம் சந்தித்தோம், இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்து கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை கட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற கருத்தை குறிப்பிட்டிருந்தோம் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
கட்சியை விட்டு வெளியேறியவர்களை எல்லாம் கட்சியில் இணைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். வெற்றிவாகை சூட வேண்டும் என்றால் கட்சியை விட்டு வெளியில் சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். கட்சியை விட்டு வெளியில் சென்றவர்களும் அவர்களின் கருத்துக்கள் மூலமும் கடிதங்கள் மூலமும் எந்த நிபந்தனையும் இன்றி ஒன்றிணைய வேண்டும் என கூறி வருகின்றனர். எனவே இந்த தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். கட்சியிலிருந்து வெளியில் சென்ற முக்கிய பதவி வகித்தவர்களை ஒன்றிணைத்தால் வெற்றி என்ற இலக்கை மட்டும் இல்லை மாபெரும் வெற்றியை அடைய முடியும் என பேசியிருந்தார்..
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் பிரமாண்டமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. நேற்று பெரியகுளம் வந்த இபிஎஸ்க்கு வித்தியாசமாக பேனர் வைத்து வரவேற்பு கொடுத்தனர் தொண்டர்கள் .
அதில்,‘நரிகளுக்கு என்ன வந்தது கேடு, உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு! அண்ணா திமுகவில் அனைவரும் உங்களோடு.. நீங்க மட்டும் போதும் தலைவா.. நாங்க இருக்கோம்!’ என்றும், ‘ஒற்றுமை வேடம் போடும் நரிகள் வேண்டாம்.. கழகத்திற்காக உயிர் வருத்தி உழைக்கும் நீங்கள் மட்டும் போதும்!’ என்றும் எழுதப்பட்டிருந்தது. தொண்டர்களும் நிர்வாகிகளும் பதாகைகளையும், பேனர்களையும் ஏந்தி நின்றனர். எடப்பாடியை பார்த்ததும், ‘நீங்க மட்டும் எங்களுக்குப் போதும்’ என்று உணர்வுபூர்வமாக குரல் கொடுத்தனர். அதிமுகவில் குழப்பம் விளைவிக்க நினைப்பவர்களுக்கு இதுவே பதிலாக அமைந்திருக்கிறது என இபிஎஸ் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.