
சமீப காலமாக அதிமுக -வில் நிலைமை சரியாக இல்லை. அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அன்வர் ராஜா அதிமுக -விலிருந்து வெளியேறி திமுக -வில் இணைந்தபோது இன்னும் சில நிர்வாகிகள் அதிமுக - பாஜக கூட்டணியை விட்டு விலகுவர் என சொன்னார். தொடர்ந்து ஓபிஎஸ் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் டிடிவி தினகரனும் பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.. இந்த சூழலில்தான் தற்போது அதிமுக -வின் ‘சீனியர்’ செங்கோட்டையன் நாளை செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசப்போவதாக பகீர் கிளப்பியுள்ளார்.
பின்னணி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 9 -ஆம் தேதி அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது.
விழாவில் கலந்து கொள்ளாத கே.ஏ.செங்கோட்டையன், ‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை என்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை’ என்று தெரிவித்த போது இருவருக்கும் இடையே இருந்த மோதல் வெளிபடையானது.
அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்ததை தொடர்ந்து கட்சியில் செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று கலிங்கியத்தில் திருமண மண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும் போது, “நாளை காலை 9.15 மணிக்கு திட்டமிட்டவாறு மனம் திறந்து பேச உள்ளேன்” எனக் கூறினார்.
துரோகத்தை சுமந்து செல்பவர்களுடன் கூட்டணி கிடையாது என்பதால் கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டதாக டிடிவி தினகரன் கூறியது குறித்து கேள்வி கேட்ட போது, “டிடிவி தினகரன் கூறிய கருத்துக்கு அவர் தான் பதில் கூற வேண்டும். அவரது கருத்துக்கு நான் பதில் கூறுவது பொருத்தமாக இருக்க முடியாது” என்றார்.
அதே போன்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றதா? "உங்களிடம் யார் யாரெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்? என்று கேட்டபோது “ நாளை காலை வரை பொருத்திருங்கள். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் அப்போது பதில் கூறுகிறேன்” என்று கூறிச் சென்றார்.
இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து, அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “எடப்பாடியை வளர்த்துவிட்டதே, செங்கோட்டையன் தான். இன்று எடப்பாடி தலைக்குமேல் வளர்ந்துவிட்டார், ஏதோ ஒரு மனக்கசப்பு ஏற்பட்டிருந்தாலும் கூட , செங்கோட்டையன் வீட்டிற்கு சென்று பேசி சமாதானம் செய்வதில் இபிஎஸ் -க்கு என்ன பிரச்சனை. எல்லாரையும் இழந்துவிட்டு என்ன கட்சி நடத்தப்போகிறீர்கள். மேலும் அதிமுக -வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திமுக -வில் மரியாதையுடனே இருக்கின்றனர். ஆகவே, அவர்கள் நம்பிக்கையுடன் பயணிக்கின்றனர். அந்த எண்ணம் செங்கோட்டையனுக்கு வரலாம் அல்லவா? மேலும் எடப்பாடியின் மோசமான நிர்வாகம் தான் இதற்கெல்லாம் காரணம்.
இவர் தனக்கு யாரெல்லாம் எதிரி என்று கருதுகிறாரோ அவர்களை எல்லாம் அனுப்பி விடுகிறார். அவர்கள் வெளியே போய் தனியாக கட்சி துவங்கிவிடுகிறார்கள். ஜெயலலிதா யாரையாவது வெளியே அனுப்பினால் வெளியே போன ஒருவருக்கு கூட அமைப்பாய் மாறும் தைரியம் வந்தது இல்லை. ஆனால் டிடிவி தினகரன் தற்போது தனியாக கட்சி நடத்தி வருகிறார். ஓபிஎஸ் தனக்கான ஆதரவாளர்களை கையில் வைத்துள்ளார். இதெல்லாம் எடப்பாடியின் திறனற்ற நிர்வாகத்தை தான் காட்டுகிறது” என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.