தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த.. 3 நாள் சிறப்பு முகாம்! எங்கே, எப்போது? போனிலேயே ஆப்ஷன் உள்ளதா? முழு விவரம்!

திருத்தங்களுக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4, 2027 அன்று வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Muthu Lakshmi

தேர்தல் ஆணைய உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட திருத்த பணிகளை செய்ய இன்றும், நாளையும் (அக்டோபர் 21, 22) உங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

கடந்த 12ம் தேதி, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரன், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் - 2027 ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் 5 கோடியே 77 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண் வாக்காளர்கள் 2.82 கோடியும், பெண் வாக்காளர்கள் 2.95 கோடியும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட SIR திருத்தத்துக்கு பிறகு வெளியான பட்டியலின் படி இருந்த வாக்காளர்களை விட, தற்போது வெளியாகியுள்ள எஸ்.எஸ்.ஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 4 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மேலும் ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணி கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருத்தங்களுக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4, 2027 அன்று வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 11.12.2026 வரை விண்ணப்பிக்கலாம். அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்கவும், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் நவம்பர் 21,22,29 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.

1.01.2027 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (அல்லது 01.04.2027, 01.07.2027, 01.10.2027 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்கள்) மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவை இணையதளம் அல்லது ECINET என்ற மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 

2027 ஜனவரி 4ம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு Voter Helpline என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் "Search Your Name in Voter List" என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதில் உங்கள் பெயரை தேடி பார்க்கலாம். உங்கள் வாக்காளர் அட்டையில் உள்ள 10 இலக்க எண்ணையும், மாநிலத்தையும் உள்ளிட்டு தேடலாம். வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு, வரும் OTP மூலமும்  சரிபார்க்கலாம். உங்கள் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம் மற்றும் மாவட்டத்தை உள்ளிட்டு தேடலாம். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.