தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மதியம் 3 மணி நிலவரப்படி வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வத் தகவல்கள், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலை விட இந்த முறை வாக்குப்பதிவு அசுர வேகத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் மக்கள் வெள்ளம் போலத் திரண்டு வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருவதால், தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். தந்தி டிவி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2021-ஐ விட 2026-ல் பெரும்பாலான மாவட்டங்களில் 15 முதல் 20 சதவீதம் வரை வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியான ஒப்பீட்டைப் பார்த்தால், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள் இந்த முறை மெகா சாதனையைப் படைத்துள்ளன. 2021-ல் மதியம் 3 மணி நிலவரப்படி நாமக்கல்லில் 59.73 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, இந்த முறை 2026-ல் 76.43 சதவீதமாக எகிறியுள்ளது. அதேபோல் சேலம் மாவட்டத்தில் 56.35 சதவீதத்திலிருந்து 75.79 சதவீதமாக ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ளது. ஈரோடு (75.61%) மற்றும் கரூர் (76.08%) மாவட்டங்களிலும் 75 சதவீதத்தைத் தாண்டி வாக்குகள் பதிவாகி வருகின்றன. கடந்த தேர்தலில் 50 சதவீதத்தை ஒட்டி இருந்த கோவை (71.16%) மற்றும் திருப்பூர் (75.38%) மாவட்டங்களிலும் இந்த முறை மக்கள் காட்டியுள்ள ஆர்வம் அரசியல் கட்சிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வட மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு வேகம் குறையவில்லை. தருமபுரி மாவட்டத்தில் 2021-ல் 56.84 சதவீதமாக இருந்த ஓட்டு சதவீதம், தற்போது 74.68 சதவீதத்தை எட்டியுள்ளது. கிருஷ்ணகிரி (70.07%), ராணிப்பேட்டை (72.46%), திருவண்ணாமலை (72.19%) மற்றும் திருப்பத்தூர் (71.46%) என அனைத்து இடங்களிலும் 70 சதவீதத்தைக் கடந்து வாக்குகள் பதிவாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 71.65 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 71.11 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் இதே நேரத்தில் 55 முதல் 58 சதவீதத்திற்குள் முடங்கியிருந்த இந்த மாவட்டங்கள், இப்போது 70 சதவீதத்தைத் தாண்டியிருப்பது ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மக்கள் உற்சாகமாகத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 54.53 சதவீதத்திலிருந்து 71.05 சதவீதமாகவும், புதுக்கோட்டையில் 56.77 சதவீதத்திலிருந்து 69.85 சதவீதமாகவும் வாக்குப்பதிவு உயர்ந்துள்ளது. நாகை மாவட்டத்தில் 69.96 சதவீதமும், திருவாரூரில் 68.43 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 66.65 சதவீதமும், சிவகங்கையில் 64.74 சதவீதமும் பதிவாகியுள்ளது. நீலகிரி போன்ற மலைப்பிரதேசங்களிலும் கடந்த முறை இருந்த 51.17 சதவீதத்தை முறியடித்து, இந்த முறை 63.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மயிலாடுதுறையில் 65.80 சதவீதமும், அரியலூரில் 68.97 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதுவரை பதிவாகியுள்ள வேகத்தைப் பார்க்கும் போது, 2026 சட்டமன்றத் தேர்தலின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 85 சதவீதத்தைத் தாண்டி புதிய வரலாறு படைக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் பங்களிப்பு இந்த அதிரடி உயர்வுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த வாக்குப்பதிவு அதிகரிப்பு ஆளுங்கட்சிக்குச் சாதகமா அல்லது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமா என்பது மே 4-ஆம் தேதி தெரிந்துவிடும். இதுவரை வாக்களிக்காதவர்கள் உடனே கிளம்பிச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு அதிகாரிகள் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்