₹5 crore bribe allegation 
தமிழ்நாடு

"பேரம் படியாததால்.. பொதுவெளியில் புலம்பலா?" - ரூ. 5 கோடி லஞ்சம்.. பேரம் பேசியது யார்? அமைச்சர் ராஜ்மோகனுக்கு நயினார் சரமாரி கேள்வி

"‘மொட்டைக் கடுதாசி’ போல மேடையில் பேசுவது கல்வி அமைச்சருக்கு அழகல்ல, திரு. ராஜ்மோகன் அவர்களே!.

Vinvizhi Leninton

இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்காக தனக்கு ரூ.5 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறிய காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது சமூகவலைதளப்பக்கத்தில் இது தொடர்பாக விமர்சித்து பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்களின்போது அமைச்சர் ராஜ்மோகன், ஒருவர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகத்தின் தலைவரான லயோலா மணியை அணுகி இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்காக தனக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக தெரிவித்தார். மேலும், இதற்கு முன்பு இதுபற்றி எங்கும்தான் கூறியதில்லை என்றும் இங்குதான் இதுபற்றி பேசுவதாக அவர் மேடையில் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், அந்தச் சலுகையை நிராகரித்து, 500 கோடி ரூபாய் கொடுத்தாலும் தகுதியற்ற வேட்பாளருக்கு அரசு அந்தப் பதவியை வழங்காது என்று மணியிடம் கூறியதாகத் தெரிவித்தார். இந்த காணொளியானது பரவலாக சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வைரலானது.

இந்த விவகாரம் தொடர்பாக, அரசியல் விமர்சகர்கள், "அந்த பெயர் குறிப்பிடப்படாத நபர் யார்?" அந்த நபர் மீது புகாரளித்து வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் பலரும் அமைச்சர் ராஜ்மோகனுக்கு சமூகவலைத்தளத்தில் அழுத்தம் தரத்தொடங்கியுள்ளனர். மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதை ஆதாரமாக கொண்டு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் திமுக-வின் சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் நேற்றைய தினம் (நவ 2) புகார் மனு அளித்தார்.

தற்போது தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில் இதுதொடர்பாக கருது ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில் அவர், அமைச்சர் ராஜ்மோகன் பேசிய அந்த காணொளியை குறிப்பிட்டு, "‘மொட்டைக் கடுதாசி’ போல மேடையில் பேசுவது கல்வி அமைச்சருக்கு அழகல்ல, திரு. ராஜ்மோகன் அவர்களே!.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி வரை உங்களுக்கு லஞ்சம் தரத் தயாராக இருந்த நபரை அடையாளம் காட்டுவதிலோ அல்லது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்வதிலோ தவெக அரசுக்கு என்ன சிக்கல்? லஞ்சம், ஊழல் குறித்த புகார்களை பதிவு செய்ய உங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண்ணிற்கு, நீங்களே ‘anonymous’ ஆக புகார் அளித்திருக்கலாமே? அதை விட்டுவிட்டு அரசு அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?.

அதுமட்டுமன்றி, உங்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இருக்கும் திரு. லயோலா மணி அவர்களை எதற்காக அணுகுகிறார்கள்?, அவரைப் பிடித்தால் தான் உங்களை நெருங்க முடியும் என்ற சொல்லப்படாத விதி ஏதேனும் இருக்கிறதா?, அல்லது அவர் மூலமாகத் தான் உங்கள் பணப் பரிவர்த்தனைகள் நடக்கிறதா?.

‘ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காதீர்கள்’ என்று முதல்வரே பொது மேடையில் கூறிய பிறகும் கூட, கோடிக்கணக்கில் அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க ஒருவர் முயல்கிறார் என்றால், அமைச்சர்கள் மட்டத்தில் முறைகேடுகள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று தானே அர்த்தம்? ஒருவேளை பேரம் படியாததால் தான் இன்று பொதுவெளியில் வந்து இப்படி புலம்புகிறீர்களோ? பதில் சொல்லுங்கள் அமைச்சரே.." என்று விமர்சித்து அந்த நபர் யார்? என்று கூறும்படியும் அவர்மீது புகாரளிக்கும்படியும் அவர் வலியுறுத்தி இந்த பதிவினை பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, தவெக ஆட்சியில் ஊழல் நடக்காது என்றும் ஊழல் செய்பவர்களை விடமாட்டோம் என்றும் பல இடங்களில் தவெக-வை சேர்ந்தவர்கள் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முதல்வர் விஜய்யும் பேசியுள்ளார். அப்படி இருந்தும் கூட ஊழல் நடைபெற்றதாகவும், குறிப்பாக 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர் நியமனங்களைச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்வளவு பெரிய தொகையை லஞ்சமாக பேசி இருந்தும் கூட அவரது பெயர் வெளியே வராததும், அவர் மீது புகார் அளிக்காததும் ஏன்? என்று பலரும் தங்களது கேள்விகளை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.