நேற்றைய தினம் (நவம்பர் 1) வாக்காளர் பட்டியல் திருத்தப் பட்டியலில் நடந்த முறைகேடு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக்கக்கோரி காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி அணி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணியை நடத்தியது. இதனை 'சலோ டெல்லி' என்று அழைத்தனர். மேலும், இந்த பேரணியை சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, எம். ஏ. பேபி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வழிநடத்தினர்.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக மத்திய டெல்லி முழுவதும் கிட்டத்தட்ட 10,000 காவல்துறை மற்றும் துணை இராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், விரிவான டிரோன் கண்காணிப்பும் அமல்படுத்தப்பட்டது. ராம்லீலா மைதானத்தில் மேடையேறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா அணித் தலைவர்களுக்கும் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். மேலும், தமிழகத்தில் இருந்து விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் பேரணியில் கலந்து கொண்டன.
இந்நிலையில், 'இந்தியா கூட்டணியில்' இருக்கும் தமிழக வெற்றி கழகம் இந்த 'சலோ டெல்லி' என்ற இந்த பேரணியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருந்தபோதிலும், தேர்தலுக்கு பிறகான காங்கிரசின் செயல்பாட்டினால் அதிருப்தியில் இருப்பதால் இந்த 'சலோ டெல்லி' பேரணியில் திமுக கலந்துகொள்ளவில்லை.
தவெக இதில் கலந்து கொள்ளாததை விமர்சித்து ஆ. ராசா தனது X தளபக்கத்தில் தவெக-வை சாடி காட்டமான பதிவொன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "‘வாக்குத் திருட்டு' க்கு எதிராகத் தலைநகரில் களமாடும் இந்தியா கூட்டணியில் 'தொடை நடுங்கி' வெற்றிக் கழகம் தடம் பதிக்கவில்லை!. பாசிசத்திற்கு 'வாலாட்டும்' அப்படி ஒரு ராஜவிசுவாசம்!! இருந்துவிட்டுப் போகட்டும். காலந்தோறும் மதச்சார்பின்மைக்கு 'காப்பிரைட்' கோரும் காங்கிரசுக்குமா சூனியமானது சுயமரியாதை? பாவம் - காந்தியும் நேருவும்தான் கலங்கி நிற்கிறார்கள்!!" என்று மிகவும் காட்டமாக தனது பதிவினை தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, விலைவாசி உயர்வு, சட்டஒழுங்கு பிரச்சனை, GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே சென்றது, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றது போன்ற பல பிரச்சனைகளில் தவெக அரசினை கண்டித்துவரும் நிலையில், திமுக MP ஆ. ராசா தவெக சார்பில் பேரணிக்கு செல்லாததை விமர்சித்து காட்டமான பதிவினை பதிவிட்டுள்ளார். தற்போது ஆ. ராசாவின் இந்த பதிவினை மேல்கொள்காட்டி திமுக IT Wing "சோப்ளாங்கி விஜய்!" குறிப்பிட்டு பதிவொன்றினை பதிவிட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.