புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அவர், "கிட்டத்தட்ட 50 லிருந்து 60 தவெக எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதை ஏற்கனவே பேட்டியில் சொல்லியிருக்கிறேன். குதிரை பேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது. இன்னைக்கு திமுக-விடம் வெளியிலிருந்து யாரையும் வாங்கும் அளவு காசு கிடையாது.
எனவே குதிரை பேரத்திற்கு வாய்ப்பு கிடையாது, ஆனால் மனமாற்றத்தை ஊக்கக்கூடிய சக்தி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.
இன்னைக்கு மக்களிடையே வந்திருக்கக்கூடிய மாற்றங்களை கண்டு தவெக எம்எல்ஏக்கள் 60, 70 பேர் நாமே தனியாக வந்து ஆட்சி நடத்தினால் நல்லாட்சி கொடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அது உறுதி செய்யப்பட முடியாத தகவல். ஆனால் இதேபோல்தான் அதிமுகவிலும், 30 பேர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இது எங்களுக்கு கிடைத்த தகவல்தான்.
அப்படி அவர்கள் அந்த அதிருப்தியில் வெளியே வந்து ஆட்சியை கைப்பற்ற நினைக்கிற போது ஆளுநர் ஆட்சி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களை திருப்திப்படுத்தப் பார்க்கிறார்கள் திருப்திப்படுத்த முடியாத சூழல்தான் அங்கே நிலவுகிறது.
தவெக முன் வரிசை தலைவர்கள் திட்டப்படி அங்கிருக்கக்கூடிய 60, 70 பேர் சேர்ந்து தனியாக ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான வழிவகை சட்டப்படி உள்ளது. ஏனென்றால் சட்டமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை 109 தான். அதில் 60 பேர் என்றால் பாதிக்கும் மேல் எண்ணிக்கை அவர்கள் பாதிக்கு மேல் வந்தால் நாங்கள்தான் உண்மையான கட்சி அவர்கள்தான் பிரிந்து விட்டார்கள் என்று சொல்லவும் வாய்ப்பு உள்ளது.
அப்படி சொல்லி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் அல்லது ஆளுநர் அழைத்து சட்டமன்றத்தை சஸ்பென்ஸ் செய்யலாம். சட்டமன்றம் சஸ்பென்ஸ் செய்யப்பட்டால் அங்கே ஜனாதிபதி ஆட்சிதான் நடக்கும். அதன் பிறகு சட்டமன்றத்தில் யாருக்காவது மெஜாரிட்டி நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கப்படும். மெஜாரிட்டியை நிரூபிக்காவிட்டால் மீண்டும் தேர்தல் வரும். அந்த தேர்தலிலே திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
எங்களை தாங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் எங்களுடைய சுமையை இறக்கி வைத்துவிட்டோம் இனிமே நாங்கள் நிம்மதியாக பணியாற்றுவோம்." எனக் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.