கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நேற்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் இந்த விவகாரத்தில் எந்த புகாரும் வரவில்லை என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் திரிசூலி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின் ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பதிவு செய்யப்பட்ட வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டப்பட்டவர் அரசியல் சாசன உயர் பதவியை வகிப்பதால், விசாரணையை ஐஜி அந்தஸ்து அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். மேலும் “கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடர்பான வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம்” என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். வழக்கின் விசாரணை அறிக்கையை டிசம்பர் 22ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து நவம்பர் 27ல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடபட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று கள்ளக்குறிச்சி MLA வீட்டிற்கு போலீசார் வந்த காவல்துறையினர், தவெக MLA அருள் விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். MLA அருள் விக்னேஷிடம் ஆய்வாளர் புவனேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விவகாரத்தில் முன்னரே பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு உரிய நடவடிக்கை கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அதிமுக கட்சியினர், ஆர்ப்பாட்டத்தை நடத்தியதோடு நில்லாமல், உயர்நீதிமன்ற விசாரணைக்கு கொண்டுவந்து தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது வரை முக்கிய பங்காற்றியுள்ளது. அதிமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பின்னர் ஆட்சியரிடம் புகார் பெற்ற உயர்நீதிமன்றம், இந்த அரசுக்கு வழக்கு பதிய சொல்லி உத்தரவிட்டது. தவெக சட்டமன்ற உறுப்பினரால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு நீதி கோரி, அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு மட்டுமின்றி, நீதிமன்றத்தையும் நாடி நீதிக்கு வழிவகுத்துள்ளது.
மேலும் “ஒன்றுமே நடக்கவில்லை” என்று சொன்ன அமைச்சர்கள் எல்லாம் இதில் துணை போயுள்ளார்கள் இல்லையா? என்றும் “MLA-வை கைது செய்வதுடன், இவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பத்துறை தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, “கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது இவ்வளவு நாள் வழக்கு பதியாமல் அவரைக் காப்பாற்றியது யார்?” என்றும் காட்டமான கேள்விகளை முன்வைத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து மதுரை செக்கானூரணியில் காவல்நிலையத்தில் மரணம் அடைத்த பாலகிருஷ்ணன் வழக்கில் நீதி வேண்டி அதிமுக IT விங் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அதில் “மதுரை செக்கானூரணியில் நடந்த காவல் மரணத்தில் பணம் கொடுத்து சமரசம் செய்து கொள்ள முயன்ற தவெக அரசின் காவல்துறை… சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்று வசனம் பேசிய ரீல் முதல்வர். இதுதான் உங்கள் ஆட்சியின் வெளிப்படைத்தன்மையா? இதுதான் நீங்கள் சொன்ன அந்த மாற்றமா? பாதிக்கட்டவர்களின் பக்கம் நில்லாமல் நடந்த குற்றத்தை மறைக்க முயல்வதுதான் தூய ஆட்சியின் கொள்கை, கோட்பாடா? என்று சரமாரி கேள்விகளை அடுக்கியுள்ளது.
அதைத்தொடர்ந்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் கல்வி சான்றிதழ் தொடர்பாக கேள்வி எழுப்ப உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தவெக MLA-கள் சிலர் போலியான கல்வி தகுதியை குறிப்பிட்டுள்ளதாகவும், அதை விசாரிக்க கோரி வழக்கு தொடர போவதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
2026 பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது, "ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே.. ஒன்னு DMK இன்னொன்று TVK" என்றும், அதிமுக போட்டியிலையே இல்லை என்பது போல அதிமுகவை “மற்றும் பலர்” என்று மட்டுமே குறிப்பிட்டு வந்தார் தவெக தலைவர் விஜய். மேலும் அதிமுக சட்டமனற்ற உறுப்பினர்கள் 6 பேர் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்ததில், குதிரை பேரம் நடப்பதாக அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. மேலும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போதும் அதிமுகவை, 'மற்றும் பலர்' என்றே முதல்வர் விஜய் பகடி செய்து வந்தார். தற்போது அந்த “மற்றும் பலர்” தான், அவர்களை நீதிமன்றம் வரை சென்று, தவெக MLA மீது வழக்கு தொடர வழிவகுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.