2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது.
ஆனால் அதிமுக பாஜக கூட்டணி முன்பை விடவும், இப்பொது பெருமளவில் வலிமையாக மாறி வருவதை காண முடிகிறது.
அதிக சீட்டுகள் கேட்கும் கூட்டணிக் கட்சிகள் !!
திமுக கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த கூட்டணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் தான் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் கடந்த முறை தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட இந்த முறை கூடுதலாக இடங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த பரப்புரையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “திமுக -வின் கூடாரம் காலியாகப்போகிறது’ எனப் பேசியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், “திமுக -விற்கும் காங்கிரசிற்கு சண்டை முற்றிவிட்டது. நெல்லையில் இன்று ஒரு காங்கிரஸ் கூட்டம் நடந்தது. அதில் திமுக -விடம் 117 தொகுதிகளை கேட்போம் என காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் பேசியுள்ளார். மேலும் ஆட்சியில் பங்கு வேண்டும் எனவும் பேசியுள்ளார்.மேலும் காங்கிரசின் முன்னாள் தலைவர் கே.எஸ் அழகிரியும், “ஆட்சியில் நிச்சயம் பங்கு வேண்டும். 60 ஆண்டுகளாக ஒரு கட்சியோடு கூட்டணி வைத்துவிட்டு சாறையெல்லாம் உறிந்துவிட்டு, வெறும் சக்கையைத்தான் காங்கிரஸ் கட்சி பார்க்கிறது’ என பேசியுள்ளார். ஆகவே இன்னும் சில நாட்களில் திமுக கூட்டணி காலியாக உள்ளது” என பேசி சலசலப்பை கிளப்பியிருந்தார்.
கடந்த முறையை விட இம்முறை அதிக சீட்டுகள் தர வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.
விசிக வைத்த செக்!
கூட்டணி கட்சி என்றுதான் பெயர். ஆனால் ஆளும் திமுக திருமாவளவனை மோசமாக நடத்துவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ‘பாசிச பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளிக்காக அவர் பலவற்றையும் சகித்துக்கொண்டுள்ளார் என கட்சியினர் வருத்தம் தெரிவித்து வருகின்றன.
கடந்த முறை சீட்டு பிரிவினையின் போது மிகுந்த வருத்தத்துடன் தான் திருமாவளவன் வெளியேறினார். ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட 6 இடங்களில் 4 இடங்களை வென்றார்கள். சமீபத்தில் தேர்தல் ஆணையம் ‘சுத்திகரிப்பு’ என்ற பெயரில் பல கட்சிகளின் அங்கீகாரத்தை பறித்தது. ஆனால் விசிக 4 எம்.எல்.ஏ மற்றும் 2 எம்.பி -களுடன் வலிமையான கட்சியாக மாறி உள்ளது. அதனால் அவர்கள் இம்முறை ஒரு 16 சீட்டாவது கோருவார்கள் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
ஆனால் இம்முறையும் திமுக அதிக சீட்டுகளை தர மறுத்தால் திருமாவிற்கு வேறு ஒரு ஆப்ஷன் இருக்கிறது. அதுதான் ‘விஜய் Factor’ - விஜய் எவ்வளவுதான் திமுக -வை விமர்சித்தாலும் அதன் கூட்டணிகளை பெருமளவில் விமர்சித்தது இல்லை. அவருக்கு தெரியும் திமுக வின் பலவீனம் தான், தங்களது பலம் என்று.. அந்த வகையில் அவர்கள் திருமா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வருகிறது என்றால், அவர் வரவேற்கத்தான் செய்வார்.
ஆகவே விஜய்-ன் அரசியல் பிரவேசம் உண்மையில் திமுக -விற்கு தூங்காத இரவுகளை வழங்கும். மேலும் தொகுதி பிரிக்கும்போது அதை எப்படி சமாளிப்பது என்பதுதான் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.