Bosevenkat 
தமிழ்நாடு

“நடிகர்கள் திரையில் மட்டுமே நடிக்க வேண்டும், மக்களிடம் நடிக்கக் கூடாது.” நடிகர் போஸ் வெங்கட் பேச்சு.

மாறாக வீண் பந்தா, பகட்டை மட்டும் நம்புவது வேதனையளிக்கிறது. இன்றைய இளைஞர்கள் ...

மாலை முரசு செய்தி குழு

திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் இன்று “தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு தீர்மானம் ஏற்பு“ பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே தங்கதமிழ்செல்வன் எம்பி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நடிகரும் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைத் தலைவர் போஸ் வெங்கட் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு குறித்து எதுவும் தெரிவதில்லை. மாறாக  வீண் பந்தா, பகட்டை மட்டும் நம்புவது வேதனையளிக்கிறது. இன்றைய இளைஞர்கள் திமுக குறித்து அறிந்திருந்தால் பந்தா, பகட்டு மற்றும் நடிகருக்கு பின்னால் செல்லமாட்டார்கள் .

நானும் ஒரு நடிகன் தான், திரையில் மட்டுமே நடிக்கத் தெரிந்த தனக்கு நிஜத்தில் நடிக்கத் தெரியாது. நிஜத்திலும், மேடையிலும் மக்களிடம் பேசும் போது நடிகர்கள் உண்மையை மட்டுமே  பேச வேண்டும்.

அது மட்டுமின்றி பச்சை கலர் பேருந்தாக இருந்தாலும் சரி, மஞ்சள் கலர் பேருந்தாக சரி உண்மையை மட்டுமே பேச வேண்டும். பொய் பேசக்கூடாது. பணம், புகழ் எல்லாம் கிடைக்கும். ஆனால் மக்களிடம் பொய் சொல்லி வாக்கு கேட்கக் கூடாது. மக்களை ஏமாற்றாமல் உண்மையை தான் பேச வேண்டும் என்றார்.

 தொடர்ந்து பேசிய அவர், ஜிஎஸ்டி வரியை  அமல்படுத்தி நாட்டு மக்களை சிரமத்திற்கு ஆளாக்கிய மத்திய பாஜக அரசு தற்போது வரி விகிதங்களை குறைத்திருக்கிறோம் எனக் கூறுவது ஒரு நாடகம்.  ஜிஎஸ்டி வரி குறைப்பால் நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் பயனடைய மாட்டார்கள். அதிகபட்சம் 20 கோடி மக்கள், அதுவும் பணக்காரர்கள் தான் இதன் மூலம் பயனடைவார்கள். மேலும் தமிழக மக்கள் படித்து நன்கு முன்னேறி விடக்கூடாது என்பதற்காகவே மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க மறுப்பதாக குற்றம் சாட்டினார்.இக்கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.