aadhav arjuna 
தமிழ்நாடு

வெள்ளி பீரோவில் பட்டுப்புடவை! கையில் வெறும் பத்தாயிரம் ரூபாயா? - ஆதவ் அர்ஜுனா

தன்னுடைய பெயரில் கார் கூட இல்லை என்று கூறும் முதலமைச்சர், தனது குடும்பத்தினர் மூலம் நடத்தும் தொழில்களை மறைக்கப் பார்க்கிறார்...

மாலை முரசு செய்தி குழு

வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அவர், முதலமைச்சர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கைவசம் வெறும் 10,000 ரூபாய் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர் அல்லது கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் கூட இதைவிட அதிகப் பணம் இருக்கும் போது, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இப்படிச் சொல்வதை மக்கள் நம்புவார்களா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசின் ஊழல்களைப் பட்டியலிட்ட ஆதவ் அர்ஜுனா, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் நேரு ஆகியோரின் துறைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகச் சாடினார். "மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, சொத்துக் கணக்கில் மட்டும் ஏழ்மையைக் காட்டுவது அநீதி. முதலமைச்சரின் மனைவிக்குச் சொந்தமான வெள்ளி பீரோ வீடியோவில் தெரிகிறது. சாதாரண வீடுகளில் கூட இல்லாத இத்தகைய ஆடம்பரப் பொருட்கள் இருக்கும் போது, அதைக் கணக்கில் காட்டாதது ஏன்? வெள்ளி பீரோவில் பட்டுப்புடவைகளை அடுக்கி வைக்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கள், கையில் காசில்லை என்று சொல்வது யாரை ஏமாற்ற?" என்றார்.

மேலும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்குவதாகவும், முதலமைச்சரின் பேரன் பெயரில் கூட கோடிக்கணக்கான மதிப்பில் படங்கள் எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். "தன்னுடைய பெயரில் கார் கூட இல்லை என்று கூறும் முதலமைச்சர், தனது குடும்பத்தினர் மூலம் நடத்தும் தொழில்களை மறைக்கப் பார்க்கிறார். ஆனால், என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் வெளிப்படையானவை. நான் பயன்படுத்தும் கார்கள் எனது நிறுவனத்தின் பெயரில் இருப்பதை நானே டிக்ளேர் செய்துள்ளேன். என் தலைவர் விஜய்யும் தனது சொத்துக்களை வெளிப்படையாக அறிவித்துள்ளார்" என்றார்.

மேலும், "தேர்தலுக்கு முன் வாரிசு அரசியல் இருக்காது என்று கூறிவிட்டு, இன்று தனது மகனைத் துணை முதலமைச்சராக்கியுள்ளார் ஸ்டாலின். தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். குடும்ப வன்முறைகள் பெருகியுள்ளன. இதைப் பற்றி கவலைப்படாமல் ஊழல் செய்வதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார். வில்லிவாக்கம் தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், தற்போதைய எம்.எல்.ஏவை மக்கள் பார்த்ததே இல்லை என்றும் அவர் கூறினார்.

வில்லிவாக்கம் தொகுதியில் திமுக பணபலம் மற்றும் ரவுடிசத்தை நம்பி இறங்கியுள்ளதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். "ஒரு ஓட்டுக்கு 3,000 ரூபாய் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறது. ஆனால், வில்லிவாக்கம் மக்கள் காசுக்கு விலை போகமாட்டார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் நடந்தது போலவே, இந்தத் தேர்தலிலும் மக்கள் பணபலத்தைத் தோற்கடிப்பார்கள். நான் கடந்த ஒரு வாரமாக இந்தத் தொகுதியில் நடந்தே பிரசாரம் செய்து வருகிறேன். ஒவ்வொரு தெருவிலும் உள்ள கழிவுநீர் பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றை நேரில் பார்த்து வருகிறேன். வெற்றி பெற்ற பிறகு கோட்டையில் அமராமல், இதேபோல் தெருத்தெருவாக வந்து உங்கள் குறைகளைத் தீர்ப்பேன்" என்று அவர் உறுதியளித்தார்.

35 கட்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் எங்கள் தலைவர் பக்கம் உள்ளனர். ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால், எம்.ஜி.ஆரைப் போல மக்கள் மனதிலிருந்து விஜய்யை யாராலும் நீக்க முடியாது. வில்லிவாக்கத்தில் திமுக எத்தனை ரவுடிசத்தை ஏவினாலும், மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்" என்று ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.