தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் வேளையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் ஒரு அதிரடியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்பாலூர் பகுதியில் அமைந்துள்ள 193-வது எண் கொண்ட வாக்குச்சாவடியில் இன்று காலை வழக்கம் போல மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) முடிக்கப்பட்டு, காலை 7 மணிக்குத் தேர்தல் தொடங்கியது. மக்கள் அமைதியான முறையில் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அங்கு நிகழ்ந்தது.
காலை சுமார் 9.05 மணி அளவில், வாக்குச்சாவடிக்குள் இருந்த அரசியல் கட்சி முகவர் (Agent) ஒருவர் திடீரென ஆக்ரோஷமாக வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திற்குள் நுழைந்தார். அங்கிருந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதற்கு முன்பே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மிக முக்கியமான பகுதியான கட்டுப்பாட்டு கருவியை (Control Unit) வலுக்கட்டாயமாகத் தூக்கி கீழே போட்டு உடைத்தார். அதிகாரிகளின் கண் முன்னாலேயே இந்த முறைகேடான சம்பவம் நடந்ததால் அங்கிருந்த வாக்காளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இயந்திரம் பலத்த சேதமடைந்ததால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் பெல் (BEL) நிறுவன பொறியாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைந்த இயந்திரத்தைப் பரிசோதித்தனர். தீவிர ஆய்வுக்குப் பிறகு, அந்த இயந்திரம் மிக மோசமாகச் சிதைக்கப்பட்டுள்ளதால் அதை மீண்டும் பயன்படுத்த முடியாது என்று பொறியாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இயந்திரம் உடைக்கப்படுவதற்கு முன்பு வரை அந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 208 வாக்குகள் பதிவாகி இருந்தன. ஜனநாயகத்தின் புனிதத்தைக் குலைக்கும் வகையில் நடந்த இந்த அராஜகச் செயலால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் அவர்கள் நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். உடைக்கப்பட்ட இயந்திரத்தில் ஏற்கனவே பதிவான 208 வாக்குகளின் விவிபேட் (VVPAT) சிலிப்புகள் பாதுகாப்பாகத் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டன. பின்னர் புதிய கட்டுப்பாட்டு கருவி மற்றும் புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அனைத்துச் சோதனைகளும் முடிந்த பிறகு, காலை 10.20 மணி அளவில் அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கித் தடையின்றி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சேதப்படுத்திய அந்த நபரை அங்கிருந்த போலீசார் உடனடியாகப் பிடித்துக் கைது செய்தனர். வாக்குப்பதிவு தலைமை அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொதுச் சொத்தைச் சேதப்படுத்துதல் மற்றும் தேர்தல் பணியைத் தடுத்தல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "ஜனநாயகக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்த எவரும் தப்பிக்க முடியாது" என்று எச்சரித்த மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்கத் தேவையான கூடுதல் பாதுகாப்பை அங்கு உறுதி செய்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்