மணப்பாறையில் பரபரப்பு.. டேபிள், சேர்களை அடித்து நொறுக்கிய பயிற்சி டிஎஸ்பி!? திமுக, அதிமுக, தவெகவினர் ஒன்று திரண்டு மறியல்

தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே டிஎஸ்பி காவியா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்...
trichy.
trichy.Admin
Published on
Updated on
2 min read

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் வேளையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. மணப்பாறை அருகே உள்ள வளநாடு அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில், தேர்தல் பாதுகாப்புப் பணியில் இருந்த பயிற்சி டிஎஸ்பியின் செயலால் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

வளநாடு அரசு தொடக்கப்பள்ளியில் 160 முதல் 164 வரை என மொத்தம் ஐந்து வாக்குச்சாவடி மையங்கள் ஒரே இடத்தில் உள்ளன. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தேர்தல் விதிகளின்படி, வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சியினர் தங்களது பூத் ஏஜெண்டுகளுடன் அமர்ந்து வாக்களிக்க வரும் மக்களுக்கு உதவி செய்து வந்தனர். திமுக, அதிமுக, நாதக மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களுக்குள் எந்தவித மோதலும் இன்றி, அமைதியான முறையில் தங்களது கட்சிக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணிக்காக வந்த வளநாடு பயிற்சி டிஎஸ்பி விக்னேஷ், திடீரென கட்சியினரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

அரசியல் கட்சியினர் அங்கு இருக்கக்கூடாது என்று மிரட்டிய பயிற்சி டிஎஸ்பி விக்னேஷ், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து கட்சியினர் போட்டிருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை அடித்துச் சேதப்படுத்தியுள்ளார். அதிகாரியின் இந்தத் திடீர் செயலால் அங்கிருந்த கட்சியினர் நிலைகுலைந்து போயினர். "நாங்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி 100 மீட்டருக்கு அப்பால்தான் இருக்கிறோம், அதுமட்டுமின்றி எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை, அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் இங்கு வந்து வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்?" என்று கேட்டு அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டு பயிற்சி டிஎஸ்பியைச் சூழ்ந்து கொண்டனர்.

பயிற்சி டிஎஸ்பி விக்னேஷின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக நிர்வாகிகள் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. ஒரு அதிகாரியே சட்டத்தை மீறிப் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தலாமா என்று அங்கிருந்த பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். நிலைமை கைமீறிச் செல்வதைக் கண்ட அங்கிருந்த மற்ற போலீசார், உடனடியாக மணப்பாறை டிஎஸ்பி காவியாவிற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே டிஎஸ்பி காவியா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை டிஎஸ்பி காவியா, ஆவேசத்தில் இருந்த அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பயிற்சி அதிகாரியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, கட்சியினரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். டிஎஸ்பியின் சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அரசியல் கட்சியினர் போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் தங்களது பணிகளைத் தொடங்கினர். இருப்பினும், ஒரு பயிற்சி டிஎஸ்பி இப்படிப் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது அந்தப் பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால் வளநாடு பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பரபரப்பு நீடித்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com