ajith mobile interview 
தமிழ்நாடு

அஜித் கொடுத்த "மொபைல்" இன்டெர்வியூ.. திமுகவை பகைக்க வேண்டாம் என நினைக்கிறாரோ..!? "அந்த" 3 பேர விட்டுட்டு பாண்டே கிட்ட மட்டும் எதுக்கு பேட்டி?

ஆங்கில ஊடகத்திற்கு தாம் அளித்த பேட்டியானது, ஒருசிலரால் அவர்களது தனிப்பட்ட நோக்கங்களுக்காக ...

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தின் இரண்டு முக்கிய சினிமா முகங்கள் என்றால் அது, விஜய்யும் அஜித்தும் தான். பல சகாப்தங்களாக தமிழ் திரையுலகின் இவர்கள் இருவரின் கையும் தான் ஓங்கி உள்ளது. இரண்டு மிகப்பெரும் நட்சத்திரங்கள் ஒருசேர வளரும்போது,  போட்டி மனப்பான்மையும் உடனே வளரும்.  ஒருவேளை அது சம்மந்தப்பட்ட நடிகர்களுக்கு இடையே இல்லாவிட்டாலும், ரசிகர்களுக்கிடையில் நிச்சயம் வளரும். அப்படி உருவாகி தமிழ்ச் சூழலில் நிலைத்து நின்றுவிட்ட ஒருபதம்தான் ‘தல தளபதி’ என்ற சொல்லாடல்.

ஆனால் ரஜினி கமல் போல் அல்லாமல் அஜித்தும் விஜயும் தங்களுக்கான இருவேறு பாதைகளை அவர்களே தேர்வு செய்துகொண்டனர். கார் ரேஸிங் மீது பெரு விருப்பம் கொண்ட அஜித் தற்போது முழுக்க முழக்க அதிலேதான் கவனத்தை செலுத்தி வருகிறார். Porsche 911 GT3 RS, Mercedes-AMG GT3 உள்ளிட்ட கார்களை தற்போது அஜித் ஒட்டி வருகிறார். Ajith Kumar Racing என்ற ரேஸிங் குழுவையும் வைத்துள்ளார். 

அவரின் போட்டியாளராகவும் நண்பராகவும் அறியப்பட்ட விஜய் “தமிழக அரசியலில் நுழைந்துவிட்டார்” இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை உருவாக்கி 2 மாநில மாநாடுகளை நடத்தி தமிழக அரசியலில் மறுக்கமுடியாத ஒரு ஆளுமையாக வளர்த்துள்ளார். ஆனால் அவரின் கட்சி செய்லபாடுகள் ஆரம்பத்திலிருந்தே விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் கரூர் துயர சம்பவம் நடைபெற்றது. இது தமிழக வெற்றி கழகத்திற்கு மிகப்பெரும் பின்னடைவாக மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். 

இந்த சூழலில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் குமார், ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்தார்,  தனது வாழ்வின் பல நிலைகள் குறித்த விரிவான பேட்டியாக அது அமைந்துள்ளது. மேலும், அஜித் விஜய் போல் அல்லாமல் தனது ரசிகர்களிடம் இருந்தும் பொது வெளியில் இருந்தும் ஒரு ஆரோக்கியமான இடைவெளியில் வாழ்ந்து வருகிறார். அது ஏன் என்பது குறித்தும் அந்த நேர்காணலில் விரிவாக பேசியிருந்தார்,  அந்த நேர்காணலில் ஒரு பொதுவெளியில் ஒழுக்க நெறிமுறை என்பது எல்லாருக்கும் பொதுவானது.  குறிப்பாக ஊடகங்களுக்கு அது நிச்சயம் பொருந்தும். மேலும் திரையரங்குகளில் எந்த ஹீரோவுக்கு பெரிய ஓப்பனிங் என்பது பெருமையாக பார்க்கப்படுகிறது. அது தேவையற்ற பகையை உருவாக்குகிறது. மேலும் சமீபத்தில் நடந்த கரூர் துயரம் ஒரு ‘Collective Failure’ ஒரு தனிநபர் மட்டுமல்ல நாம் அனைவரும் அதில் பொறுப்பேற்க வேண்டும். கூட்டத்தை கூட்டுவதை பெருமை என நினைக்கும் அதீத சமூகமாக இன்று நம் மாறியிருக்கோம்” என அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.

விவாதப்பொருளான அஜித் பேச்சு!!

ஆனால் அன்று முதலே அஜித் பேசிய பேச்சு வைரலாகி, பல ஊடகங்கள் அவர் பேச்சை ‘Decode’  செய்ய துவங்கின. சிலர் அவர் ‘விஜய் -யை குத்தி காட்டி பேசுகிறாரோ” என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினர். இந்த சலசலப்பு இணையத்தில் உலவியதை தொடர்ந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மீண்டுமொரு பேட்டியை பத்திரிகையாளர், ரங்கராஜ் பாண்டே -க்கு அளித்துள்ளார்.  ஆடியோ பேட்டியான அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த பேட்டியில் “ஆங்கில ஊடகத்திற்கு தாம் அளித்த பேட்டியானது, ஒருசிலரால் அவர்களது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது, சிலர் அஜித் - விஜய் இடையிலான மோதல்போல ஆக்கிவிட்டனர். தான் எப்போதும் ஓட்டு கேட்டு வரமாட்டேன். காருக்குள் நுழையும் ஒவ்வொரு கணமும் உயிர்போகும் தருணம் என்பதை நான் நன்கறிவேன். ஆகவே எனக்கென்று எந்த திட்டமோ, உள்நோக்கமோ கிடையாது. கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது, அது நீண்டநாட்களாக நடக்க காத்திருந்த விபத்து, இறப்பு வீடுகளில் பூத உடல்களை படம் பிடிக்க கேமராக்களை கொண்டு போய் சில ஊடகங்கள் நிற்கின்றன. இவர்களே இப்படி இருக்கையில் ரசிகர்களையோ, தொண்டர்களையோ குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது. நானும் குற்றத்திற்கு பொறுப்பானவன்தான். மக்களும், அரசும் ஒன்றுக்கு ஒன்று பிணைந்ததாக இருக்க வேண்டும்.

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. என்றும் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன், வாழ்த்தி இருக்கிறேன். என்னைப் பிடிக்காதவர்கள் எப்போதுமே என்னை வேற்று மொழிக்காரன் என்று கூறி வருகின்றனர். ஒருநாள் அவர்கள் உரத்த குரலில், தன்னை தமிழன் என்று அழைப்பார்கள். கார் ரேஸில் சாதித்து இந்த மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன்” என பேசிய அஜித்  இந்தப் பயணத்தில் தனது உயிரே போனாலும் பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.

திமுக -வுக்கு பயந்தாரா அஜித்!?

அஜித் பாண்டேவுக்கு வழங்கிய பேட்டி குறித்து பேசிய வலைப்பேச்சு அந்தணன், “அஜித் ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி தான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது, என அவர் பாண்டேவுக்கு நேர்காணல் கொடுத்துள்ளார், இந்த பேட்டியை எல்லாம் அவர் தமிழில் கொடுத்திருந்தால், அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே புரிந்துகொண்டு போயிருப்பார்கள். ஆனால், இந்த பேட்டியை ஏன் பாண்டேவுக்கு வழங்கினார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அஜித் சார்புத் தன்மை இல்லாதவர்களாக அறியப்படும் நீயா நானா கோபிநாத், கார்த்திகைச் செல்வன், அசோகா வர்ஷினி இவர்களில் யாரோ ஒருவரிடம் பேசியிருந்தால் கூட அது பெருமளவு மக்களிடம் போய் சேர்ந்திருக்கும். மேலும் ரங்க ராஜ் பாண்டே ஒரு நடுநிலையாளராக முன்பு அறியப்பட்டார், ஆனால் தற்போது இல்லை.  அவர் ஒரு சார்பு நிலை எடுக்கக்கூடியவர்தான். அவர்கள் இருவரும் ‘நேர்கொண்ட பார்வை’ சமயத்தில் இருந்தே நண்பர்கள் என்பதால் கூட அவரிடம் பேட்டி அளித்திருக்கலாம். 

ஆனால், அஜித் பேசிய விஷயத்தின் ஒரு பகுதியை மட்டுமே ‘அஜித் குரலில் வெளியிட்டிருந்தார் பாண்டே’ மற்றவை எல்லாம் அஜித் கூறியதாக பாண்டே தன் குரலில் பதிவிட்டிருந்தார். ஒருவேளை அஜித் பேசிய வார்த்தைகளை அவர் தனக்கு ஏற்றாற்போல் மாற்றி கூட மொழி பெயர்த்திருக்கலாம் என்ற சந்தேகமும் வருகிறது. ஆனால், அதையெல்லாம்  விட முக்கியமான விஷயம் என்னவென்றால், அஜித் தனது போட்டியாளராக பேசப்பட்ட விஜய் குறித்து ஆதரவான நிலைப்பாட்டை கூறியுள்ளார், ஆனால் அந்த வார்த்தைகளை தனது குரலிலேயே பதிவிட சொல்லியிருந்தால் “விஜய் ரசிகர்கள்” ஆனந்தமாக இருந்திருப்பார்கள். 

ஆனாலும், விஜய் தற்போது ஒரு நடிகர் மட்டுமல்ல அரசியல் கட்சியின் தலைவர், மேலும் அவர் ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். எனவே இப்படி பகிரங்கமாக, விஜய் -க்கு ஆதரவு தெரிவித்தால் திமுக -வின் கோபத்துக்கு ஆளாக கூடும் என்ற பயத்தில் கூட ‘அந்த வார்த்தைகளை தனது குரலில் பதிவிட வேண்டாம்’ என அஜித் நினைத்திருக்கலாம். ஆனால் அவரின் எண்ணம் தூய்மையானது, அவர் இந்த நேர்காணலில் திரும்ப திரும்ப சொல்லுவது, மோட்டார் ஸ்போர்ட்ஸ் -ஐ வளர்த்துவிடுங்கள் என்பது தான், அந்த வகையில் நாம் இதை பாஸிட்டிவாகத்தான் பார்க்க வேண்டும்” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.