

செங்கோட்டையனை அடிப்படை பதவியிலிருந்து நீக்கிய ஒழுங்கு நடவடிக்கைக்கு செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துவருகிறார். அதில் “கடந்த ஆறு மாதங்களாகவே செங்கோட்டையனின் செயல்பாடுகள் கழகத்திற்கு எதிராகத்தான் இருந்து வருகிறது. அத்திகடவு அவிநாசி திட்டத்தின் பாராட்டு விழா கட்சியின் சார்பில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டது. அதில் நான் கலந்துகொண்டேன் அப்போது திட்டமிட்டு செங்கோட்டையன் விழாவில் ‘எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் படங்கள் வைக்கப்படாததால் நான் கலந்து கொள்ளவில்லை’ என்ற கருத்தைப் பரப்பினர்.
செங்கோட்டையன் அவரது தொகுதியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் எங்கே அம்மா படமும் புரட்சி தலைவர் படமும் வைக்கப்பட்டிருந்தது? அதற்கு மாறாக ஸ்டாலின் படமும் கலைஞர் படமும் தான் இருந்தது. அப்போது இருந்தே அவர் ‘B டீம்’ வேலைகளை தொடங்கிவிட்டார். வெளியில் சென்றவர்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் இல்லை அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பொதுக்குழு சிறப்பு தீர்மானத்தின் படி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் எந்தவித தொடர்பு வைத்து கொள்ள கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
53 வருடம் கழகத்தில் இருந்தவருக்கு தெரியாத பொதுக்குழுவில் தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கு நன்றாக தெரியும் இருந்து விதிகளை மீறினால் தலைமை நடவடிக்கை எடுக்கும், மீண்டும் சொல்கிறேன் இது நான் எடுத்த நடவடிக்கை இல்லை கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் கலந்து பேசு சட்ட திட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் விசுவாசி என்கிறார் செங்கோட்டையன் அப்படி இருந்தால் ஏன் அம்மா பதவியில் இருந்த போது அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்? பின்னர் நான் அவருக்கு பொறுப்பு கொடுத்தேன்.
அம்மா இருக்கும் போது 10 ஆண்டுகளுக்கு முன்பே அவரால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன். இப்போது அவர் எங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இதுவரை அவர் சட்டமன்றத்திலும் சரி பொதுக் குழுக்களிலும் திமுகவிற்கு எதிரான கருத்தை பேசியதே கிடையாது. இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் திமுகவிற்கு ‘B டீம்’ என்பது. நாங்கள் இன்று வரை உண்மையாக இருப்பதனால் தான் கழகத்தில் பொறுப்பு வகித்து கொண்டிருக்கிறோம். நான் மற்றவர்களை போல பச்சோந்தியாக இருந்து நிறம் மாற மாட்டேன்
மற்றவர்களை எல்லாம் செங்கோட்டையன் கட்சியில் இணைக்க சொல்வது அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை, திமுக பதவி வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான். இவர்களை எல்லாம் எப்படி கட்சியில் இணைக்க முடியும். அவர் தனது பகுதியில் ஒரு சிற்றரசர் போல நடந்துகொண்டார். இன்று அந்த பகுதி மக்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.