தமிழக அரசியல் களத்தில் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் கவனம் பெற்றுள்ள தொகுதியாக மாறியுள்ளது. காரணம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்க போவதாக தெரிவித்திருந்தது, அரசியல் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஆதரவு அளித்தால் பொது வேட்பாளராக களமிறங்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
சீமானின் இந்தப் பேச்சுக்கு, திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு இது குறித்துப் பேசலாம்” என்று தெரிவித்திருந்தார். பொது வேட்பாளர் என்பதை மறுக்காமல் ஸ்டாலின் சொன்ன இந்த பதில் புதிருக்கு புதிர் போட்டது போல இருந்தது. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு ஸ்டாலின் ஆதரவளிக்க வாய்ப்புள்ளது, கூட்டணி அமையும் என்ற பேச்சுக்களும் அரசியல் வட்டாரத்தில் வலம் வந்தது.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் என்பது ஒரு தொகுதிக்கான தேர்தலாக மட்டுமல்லாமல், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான முக்கியமான வாய்ப்பாகவும் திமுக மற்றும் அதிமுக பார்க்கும். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அடுத்தடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தங்களது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பொது வேட்பாளர் என்று ஒருவரை தேர்வு செய்தால், அது அந்த கட்சியின் வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்பதால் திமுக அதற்கு விருப்பம் காட்டாது என்றும் சொல்லப்படுகிறது. இதனால், அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானின் பொது வேட்பாளர் திட்டம் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது இதுவரை கணிப்பில் மட்டுமே இருக்கும் ஒரு விவாதமே.
மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சிக்கு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அளித்த நேர்காணலில் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் மற்றும் நாதக-திமுக கூட்டணி கணிப்பு ஆகியவற்றை குறித்து பேசியுள்ளார்.
நெறியாளர்; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன?
முதலில் திமுகவுக்கு மாற்று என்று பேசிவந்தார். அப்போது 1% இருந்து 8% வாக்கு சதவீதத்திற்கு சென்றார். தற்போது விஜய் 35 விழுக்காடு எடுத்த பிறகு மும்முனை போட்டியை 4 முனை போட்டியாக மாறியுள்ளது. இது சீமானின் வாக்கு வங்கிக்கு மேலும் சவாலை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் திமுக ஒரு ஹிண்ட் கொடுப்பதற்கு காரணம் அவரை ஆன்டி தவெக என்று நிறுத்த முற்படுகிறார்.
ஆனாலும் அதிமுக அப்படி இல்லை.. அவர்கள் நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளார்கள். அந்த தொகுதியில் இசக்கிசுப்பையா என்பது அதிமுக இல்ல. நாங்க தான் அதிமுக என்று நிரூபிக்க வேண்டிய ஒரு நிர்பந்தம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சீமானுக்கு இடைத்தேர்தலில் ஆதரவு கரம் கொடுக்க வாய்ப்பில்லை.
அதே சமயம் பல ஆண்டுகளே விமர்சித்து வரக்கூடிய சீமான், இப்போ அவங்களுடைய ஆதரவோடு ஒருவேளை ஒரு பொது வேட்பாளராக நிற்கும் பட்சத்துல வாக்காளர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையும் இரு கட்சிகளும் யோசிக்கும் என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.