4 நாட்கள் விடுமுறையை அடுத்து, இன்று சட்டப்பேரவை கூடியது. மேலும், புதிய அரசு ஆட்சி பதவியேற்று 100 நாட்கள் ஆனதை தொடர்ந்து சபாநாயகர் பாராட்டி வாழ்த்தி பேசினார். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கை தலைவர்களாக ஏற்று 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உன்னத கோட்பாட்டை தனது அரசியல் சித்தாந்தமாக கொண்டு மதச்சார்பற்ற சமூக நீதியை காக்கும் உண்மையான மக்கள் தலைவர் மாண்புமிகு முதலைமைச்சரின் தலைமையில் அமைந்துள்ள இந்த பொற்கால அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்களை கம்பீரமாக நிறைவு செய்கிறது என்று பேசினார். மேலும் கோவை சம்பவம் தொடர்பாக இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்கிறேன் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
தமிழகத்தில் அண்மை காலமாக நடைபெற்று வரும் கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டம்-ஒழுங்கு சம்பவங்களை சுட்டிக்காட்டி, 100 நாள் ஆட்சியின் சாதனைகள் குறித்து அரசு பெருமை பேசும் நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடுமையாக விமர்சித்தார்.
கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை, திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி இளைஞர் ரஞ்சன் கொலை, கிருஷ்ணகிரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தூத்துக்குடி ஆறுமுகநேரியில் ஆளுங்கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் தொல்லை வழக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆளுங்கட்சி நிர்வாகி மீதான பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல சம்பவங்களை பட்டியலிட்ட அவர், “தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி” என்றார்.
குறிப்பாக கோவை மாணவர் அமுதன் கொலை தொடர்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஒரு மாணவனை 20 பேர் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ளனர். இது சாதாரண கோஷ்டி மோதல் அல்ல; திட்டமிட்ட படுகொலை. போதைப்பொருள் கும்பல் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால் அமுதன் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் அளித்த தகவலையே சிலர் குற்றவாளிகளிடம் தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த கொலை அரசின் அலட்சியத்தாலும், காவல்துறையின் பொறுப்பற்ற அணுகுமுறையாலும் நடந்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “போதை கலாசாரத்திற்கு எதிராக நிற்கும் இளைஞர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக மாறியுள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் பரவலை தடுக்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், கோவை மாணவர் அமுதன் கொலைக்கு போதைப்பொருள் விவகாரம் காரணம் என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.
“கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடத்தியுள்ளது. மாணவர் குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக இருந்து வந்த முன்விரோதமே இந்த கொலைக்கு காரணம். போதைப்பொருள் விவகாரம் காரணம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது” என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
அமுதன் கொலை சம்பவம் குறித்து எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் நேருக்கு நேர் மோதிய நிலையில், இந்த விவகாரம் சட்டப்பேரவையில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. மாணவர் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், சம்பவத்தின் உண்மை காரணம் குறித்து அரசின் விளக்கமும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்