CM Vijay Madurantakam Campaign 
தமிழ்நாடு

"பாவம் அதிமுக.. முகமூடி கிழிந்தது தெரியாமலேயே கூவிக் கொண்டிருக்கிறது" - மதுராந்தகத்தில் விட்டு விளாசிய முதல்வர் விஜய்

யார் என்ன கூவினாலும் நமக்கு என்ன? நம்முடைய ரூட் ஒரே ரூட்தான், ஸ்ட்ரைட் ரூட்தான்.

Vinvizhi Leninton

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்த காரணத்தால் அந்த தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக சார்பில் மீண்டும் மரகதம் குமரவேலை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

அதனால், இன்று அவருக்கு வாக்கு சேகரிப்பிற்காக, முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதிக்கு வந்திருந்தார். மதுராந்தகம், அச்சரப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள மைதானத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் வேட்பாளர் மரகதம் குமரவேலைத் தொடர்ந்து முதல்வர் விஜய் பேசினார்.

அப்போது திமுகவினரை காட்டமாக சாடியதோடு, அதிமுகவினரையும் விமர்சித்து பேசினார். அதில் அவர், திமுகவினருக்கு மற்றும் பலர் ஆதரவு தருவதாக பேசினார். அப்போது,

"மற்றும் பலர் யார் என்று தெரியுமா? ஒரு மூன்று மாதம் டச் விட்டு போயிருப்பதால் திரும்பவும் சொல்கிறேன், அதிமுக. ஜெயலலிதா மேடமையே தப்பா பேசியவர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஐடியா பண்ணும்போதே இந்த 'மற்றும் பலரின்' திட்டம் என்னவென்று எல்லாம் தெரிந்துபோய்விட்டது.

அப்போதே அவர்களது முகமூடி கிழிய தொடங்கிவிட்டது. அவர்கள் முகமூடி கிழிந்தது தெரியாமலே குதித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் என்ன கூவினாலும் நமக்கு என்ன? நம்முடைய ரூட் ஒரே ரூட்தான், ஸ்ட்ரைட் ரூட்தான். அதனால், மதுராந்தகம் தொகுதி மக்களே, கிட்டத்தட்ட இந்த இடத்திலிருக்கும் நமது தவெக சார்பாக... உங்கள் சகோதரி, நம்ம வீட்டு பெண்ணுக்கு, என் தங்கச்சி மரகதம் குமரவேல் அவர்களுக்கு...

தயவுசெய்து விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். நீங்கள் விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுவது இந்த பெண்களை அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாக பேசக்கூடிய ஒவ்வொருத்தருக்கும் கொடுக்கக்கூடிய தண்டனையாக இருக்கும்" என்று மக்கள் முன்னிலையில் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த திமுகவுக்கோ அல்லது தீய சக்திக்கோ, ஆபாச சக்திக்கோ, மற்றும் பலருக்கோ நீங்கள் ஓட்டு போட்டீர்கள் என்றால், பெண்களை தவறாக பேசுபவர்களை நீங்கள் ஆதரிப்பது போல ஆகிவிடும் என்றும் நம் வீட்டு பெண்களை இதுபோல பேசுபவர்களை நீங்கள் சும்மா விடக்கூடாது என்று ஆவேசமாக பேசினார்.

மேலும், "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று, அண்ணா சொன்னார், அப்படி பார்த்தால் 108 சீட் வாங்கிய நாம் ஆட்சி அமைக்க வேண்டும். அது நடந்துவிடக்கூடாது என்று திமுகவும் மற்றும் பலரும் சேர்ந்து ஒரு போரை செய்கிறார்கள், பாருங்கள். இந்த 'மற்றும் பலர்' பாஜகவினுடைய ஒரு பிராஞ்ச். இப்போது திமுகவின் கிளைக் கழகமாக மாறிவிட்டார்கள். இதை நான் சொல்லவில்லை, பெரிய பெரிய தலைவர்களே சொல்கிறார்கள் என்று குற்றச்சாட்டினை முன்வைத்து பேசினார்.

மேலும், மதுராந்தகம் மக்கள் முன்னிலையில் திமுக, அதிமுகவினை சாடியதோடு அந்த தொகுதி மக்களின் தேவைகளையும் பட்டியலிட்டு பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்