வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ‘திருவனம்’ எனும் பெயரில் 15,000 மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றார்.
அங்கு பேசும்போது, மன்னார்குடியிலும் தாராபுரத்திலும் தான் கடினமாக உழைத்து வாக்கு சேகரித்ததாகவும், அந்த வேட்பாளர்கள் இப்போது அந்தக் கட்சியிலேயே இல்லை என்றும் கூறி வருந்தினார்.
அத்துடன், “மக்கள் கையில் இருக்கும் மை காய்வதற்குள் கட்சி மாறும் அரசியலை உடைக்க வேண்டும். இதுபோன்ற ஒரு மோசமான அரசியலுக்குள் நாமும் போகக் கூடாது” என்றார்.
மேலும், “வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, அடிப்படை மாற்றத்தை கிராமங்களில் இருந்து உருவாக்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்” என அறிவித்தார்.
அண்ணாமலையின் இந்த அறிவிப்பு, வீ த லீடர்ஸ் அமைப்பின் தேர்தல் பங்கேற்பை உறுதி செய்துள்ளது.
நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் ஐந்து முனைப் போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்குச் சாதகமாக அமைந்தன. கட்சி மாறிப் போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், ஆளும் கட்சி மிகப் பெரிய அளவில் வாக்குகளைக் குவிக்கவில்லை.
இதனால், வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருக்குமா என்பது பெரும் கேள்வியாக இருந்து வந்தது. இந்த நிலையில், போட்டியை அதிகரிக்கும் வகையில் வீ தி லீடர்ஸ் அமைப்பும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் அரசியல் அனுபவம் கொண்டவர்கள் மிகக் குறைவே. மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை நம்பியே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது தவெக. அதேபோல, வீ தி லீடர்ஸ் அமைப்பும் புதிய அமைப்பே. அண்ணாமலையின் பாஜக ஆதரவாளர்கள் சிலர் உடன் இருந்தாலும், தேர்தலில் களமிறங்கும்போது பாஜகவினரின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது.
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில், வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு முக்கியப் பங்காற்றும் என்பதால், அண்ணாமலையின் இந்த அறிவிப்பு தவெகவுக்குச் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்