கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் நேற்று (செப் 28) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மேகதாது விவகாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் குழு ஒன்றை அனுப்பியிருப்பதாகவும், தமிழக எல்லைக்கு மிக அருகிலேயே, அதாவது மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த மேகதாது அணை அமையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், மேகதாது அணையை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டின் நிலைப்பாடு எதிராக உள்ளது. இந்நிலையில் கர்நாடக முதல்வர், மேகதாது விவகாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் குழு ஒன்றை அனுப்பியிருப்பதாக கூறிய செய்திக்கு, தமிழக அரசு சார்பில் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கப்படாத நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது X தளப்பக்கத்தில் தவெக அரசை விமர்சித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..?. தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட தாய்மாமா என்ன செய்யப் போகிறார்?.
மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இதுகுறித்து இன்னமும் தமிழக அரசு சார்பில் எந்த செய்தியும் வரவில்லை.
கர்நாடகத்துடன் தமிழக அரசு கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்குத் துணை போகிறதா? என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகிறது. மேகதாது அணை கட்டுமான அனுமதி கேட்டு கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு.சி. ஆர். பாட்டீல் அவர்களை சந்தித்துப் பேசியிருப்பதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது.
தமிழகம் புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ, நீர் தேக்கமோ கட்ட இயலாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை முதல்வர் அறிவாரா?. தண்ணீர் திறப்புக்கும் வாய் திறக்கவில்லை. அணை கட்ட தடுப்பதற்கு வாய் திறக்கவில்லை.
கர்நாடக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசுக்கும் ரீல் முதல்வருக்கும் கடுமையான கண்டனம். உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என்று தனது அதிகாரப்பூர்வ X தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்