"அவர் மந்திரி இல்ல முந்திரி.." - அமைச்சர் ஆதவை அட்டாக் செய்த பிரேமலதா! மீண்டும் 'ஒரு துரோகி வெற்றி பெறக் கூடாது' என சாடல்

"நான்தான் பெண்களுக்கு பாதுகாவலன்; அண்ணன், தம்பி, தாய்மாமன் என்று கூறினாலும் என்ன பாதுகாப்பு கொடுத்தீர்கள்?"
Madurantakam Bypoll 2026
Madurantakam Bypoll 2026
Published on: 
Updated on: 
2 min read

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா, எல் எண்டத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் பேசிய அவர், "இந்த தேர்தல் வர யார் காரணம்?, இந்த தேர்தல் இப்பொழுது தேவையா?, தேர்தல் முடிந்து பத்து நாட்களில் வாக்காளர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சிக்கும் துரோகம் செய்து விட்டார்" என்று மரகதம் குமரவேலை சாடி பேசினார்.

"ஓட்டு போட்ட மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார், அவருக்கு தக்க பாடம் இத்தொகுதி மக்கள் தர வேண்டும். உழைத்த மக்களை ஏமாற்றி விட்டார் என்று ஆவேசமாக பேசினார். மேலும், "துரோகிக்கு ஒரு ஓட்டு கூட போடாதீர்கள்" என்று மக்களை பார்த்து பேசினார்.

மேலும், மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி பெற்றால் அவர் செய்வதற்காக நிறைய பணிகள் இங்கு உள்ளது என்றும் பேசினார். மேலும், மதுராந்தகம் தொகுதி மக்கள் காவல் நிலையம் செல்ல வேண்டும் என்றால் 16 கி.மீ செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மக்கள் அவதியுறுவதாக பிரேமலதா சுட்டிக்காட்டி பரப்புரையில் பேசினார். மேலும், பரந்தாமன் வெற்றி பெற்றால், காவல்நிலையம் கட்டித்தருவர் என்றும் அவர் உறுதியளித்தார்.

"இங்கு பல கிராமங்கள் இருப்பதால் மின்தேவையும் அதிகமாக இருக்கிறது. ஆனால், தற்போது உள்ள ஆட்சி தமிழ்நாடு முழுக்க மின்வெட்டு ஆட்சியாக உள்ளது. மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டினை மின்வெட்டு மாநிலமாக மாற்றியதுதான் இன்றைய அரசின் சாதனை, பெருமை" என்று அவர் பேசினார். மேலும், பரந்தாமன் வெற்றிபெற்றால் மதுராந்தகத்தில் துணை மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி கொடுத்தார்.

வாரச்சந்தையில் வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி, தனியாக ஒரு வாரச்சந்தையை உருவாக்கித்தருவர் என்றும் கூறினார். மேலும், மதுராந்தகத்தில் உள்ள ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய பிரேமலதா, இதுகுறித்து சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் உட்பட பலரும் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், "செவிடன் காதில் ஊதிய சங்கு போல" எதை கூறினாலும் அதற்கு பதிலே வருவது இல்லை என்று அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, "தவெக வந்த பிறகு ஏதேனும் மாற்றத்தை நீங்கள் பார்த்தீர்களா?" என்று மக்களை நோக்கி, "ஆட்சியில் திருப்தியாக இருக்கிறீர்களா? சந்தோசமாக இருக்கிறீர்களா? என்று பிரேமலதா கேள்வி கேட்க அதற்கு மக்கள் "இல்லை.. இல்லை" என்று பதிலளித்தனர். மேலும், "நான்தான் பெண்களுக்கு பாதுகாவலன்; அண்ணன், தம்பி, தாய்மாமன் என்று கூறினாலும் என்ன பாதுகாப்பு கொடுத்தீர்கள்?" என்ற கேள்வியினையும் எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், "நான் பார்த்து கேப்டனோடு இருந்து வளர்ந்தவர் தான் விஜய். உங்களுக்கு வேண்டும் என்றால் விஜய் புதிதாக தெரியலாம்.' சட்டமன்றத்தில் பேசினால் கூட உரிமையோடுதான் பேசுவேன். ஏன் இதையெல்லாம் செய்யவில்லை? என்று கேட்டால் உடனே ஒருத்தர் எழுந்துருச்சி நின்னுடுவாரு. 6 அடில ஒருத்தர் ஆதவ் அர்ஜுனா" என்று பேச கூட்டத்தில் மக்களிடையே சிரிப்பலை எழுந்தது.

தொடர்ந்து பேசிய அவர், "யார் என்ன கேள்வி கேட்டாளும், என்ன துறையை சார்ந்து பேசினாலும், ஒன்னு இருக்குதே நம்ம ஊருல 'முந்திரி கொட்டை'.. அவர் 'மந்திரி' இல்லை 'முந்திரி'. எதுகேட்டாலும் ஆளுக்குமுன்னாடி எழுந்திருச்சி நின்னுடுவாரு. எந்த 'சப்ஜெக்ட்' வந்தாலும் அவருதான் பேசுவாரு. எதுனாலும் உடனே சண்டைய வளர்ப்பாரு.

எதைச் சொன்னாலும் திமுகவை தாக்கி பேசுவாரு, இதை தவிர ஒன்னும் தெரியாது. தம்பி ஆதவ் அர்ஜுனா நீங்க ஜெயிச்சிருக்கீங்க; மக்களுக்கு என்ன செய்ய போறீங்க? என்று கேட்டால் அதற்கு பதில் கிடையாது. எதற்கெடுத்தாலும் திமுகவை திட்ட வேண்டியது. ஸ்டாலினை திட்ட வேண்டியது. அப்படி என்னதான் திமுக மீது காழ்புணர்ச்சியோ தெரியல. ஒருநாளைக்கு ஒருலட்சம் தடவையாவது திமுக.. திமுக என்று சொல்லுவாரு" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக சாடி பேசினார்.

மேலும், அங்கு பிரச்சாரத்திற்கு வந்தபோது கூட அவரது வாயில் இருந்து அதிகமாக வந்த வார்த்தை திமுகதான் என்று குறிப்பிட்டு பேசினார். "இதுல வேற சவால் விட்டுட்டு போயிருக்காரு" என்று பிரேமலதா கூற அதற்கு மக்கள் அவரை நோக்கி "இங்கேதான் சவால் விட்டார்" என்று கூறினர்.

"இதே இடத்துலதான் சவால் விட்டுட்டு போயிருக்காரு. மக்கள் என்பது உண்மை என்றால், மக்கள் துரோகத்திற்கு பின்னால் நிற்க மாட்டார்கள் என்றால், மக்கள் என்றைக்கும் நல்ல வேட்பாளருக்குத்தான் துணை நிற்பார்கள் என்றால், இதே எல். எண்டத்தூரில் ஆதவ் அர்ஜுனாவை மண்ணை கவ்வ வைக்கவேண்டும். அவர் சொன்ன வார்த்தைகளுக்கு நிச்சயமாக நீங்கள் அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும். கொடுப்பீர்களா?" என்று பிரேமலதா கேட்க, "கொடுப்போம்" என்று மக்களும் அதற்கு பதிலளித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com