அரசியல் களத்தில் தனது இரண்டாவது பயணத்தை நாகப்பட்டினத்தில் தொடங்கிய நடிகர் விஜய், அங்கே திரண்டிருந்த மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னால், ஆளும் அரசுக்கு எதிராகக் கடும் சீற்றத்துடன் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது அரசியல் பயணத்திற்கு அரசு தரப்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து வெளிப்படையாகப் பேசிய விஜய், முதலமைச்சரை நேரடியாகக் குறிப்பிட்டு, "மிரட்டிப் பார்க்கிறீங்களா?" என்று கேள்வி எழுப்பியது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், தனக்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து முதலில் பட்டியலிட்டார். "நான் உங்களை நோக்கி வந்து பேசுவதற்கு அவ்வளவு கட்டுப்பாடுகள் போடுறாங்க. உங்களைப் பார்த்து சிரிக்கக் கூடாதாம், கை அசைத்துக் கூடப் பேசக் கூடாதாம். வண்டிக்குள்ளேயே உட்கார்ந்து இருக்கணுமாம். வாகனத்தை விட்டு வெளியே வரக் கூடாதாம். அதிகம் பேசக் கூடாதாம்," என்றார்.
தொடர்ந்து பேசிய விஜய், "மக்கள் நிற்கக் கூட இடமில்லாத இடமாகப் பார்த்து நமக்கு ஒதுக்கி அங்கே பேசச் சொல்கிறார்கள். ஏன்.. மக்களே, நான் உங்களைப் பார்க்கக் கூடாதா? பார்க்க வரக் கூடாதா?" என்று உணர்ச்சிபூர்வமாகக் கேள்வி எழுப்பினார்.
விஜய்யின் பேச்சின் உச்சகட்டம், முதலமைச்சரை நோக்கி அவர் நேரடியாக வீசிய சவால் தான். எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், "என்ன, என்னை மிரட்டிப் பார்க்குறீங்களா CM சார்? உங்க மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆள் இல்லை இந்த விஜய்" என்று பகிரங்கமாகக் கேட்டது, அவரது அரசியல் பயணத்தில் ஒரு புதிய, ஆக்ரோஷமான அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
இதற்கு மேலும் ஒரு படி சென்று, "கொள்ளையடித்துக் குடும்பத்தை வளர்த்து வைத்திருக்கும் உங்களுக்கே இவ்வளவு இருக்குன்னா, நேர்மையா சம்பாதித்து வாழும் எனக்கு எவ்வளவு இருக்கும்?" என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியது தான் ஹைலைட்டே.
விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு, தமிழக அரசியலில் சில முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.