தமிழ்நாடு

“தீவிரவாத தாக்குதலில் உடலில் பாய்ந்த குண்டு” - எல்லையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்.. தூத்துக்குடியில் குவிந்த அரசியல் தலைவர்கள்!

நேற்று முன்தினம் சுடலைமணி உள்ளிட்ட அஸ்ஸாம் ரைபிள் பிரிவை சேர்ந்த ஏழு ராணுவ வீரர்கள் ..

Muthu Lakshmi

தூத்துக்குடி மாவட்டம் மேலக்கூடுடன்காடு பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி (31) . இவர் அசாம் மாநில ரைபிள் பிரிவில் எல்லை பாதுகாப்பு பணியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள், இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு  முடிந்து அஸ்ஸாம் சென்று பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுடலைமணி உள்ளிட்ட அஸ்ஸாம் ரைபிள் பிரிவை சேர்ந்த ஏழு ராணுவ வீரர்கள் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,  தீவிரவாதிகள் தாக்குதலில் சுடலைமணி உடலில் குண்டு பாய்ந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுடலைமணி உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊரான மேலக்கூடுடன்காடு கிராமத்திற்கு  கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ராணுவ வீரர் உடலுக்கு தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் ஆதர்ஷ் பால் மற்றும் உதவி கமாண்டர் அமமன் சிங் தலைமையில் கடலோர காவல் படையினர் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தியதுடன் ராணுவ வீரர் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து கொண்டார். மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி MP, முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் ராணுவ வீரர் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுடலைமணி உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கடலோர காவல் படை வீரர்கள் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்திய பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது

முன்னதாக ராணுவ வீரர் சுடலைமணி மீது பொருத்தப்பட்ட தேசிய கொடியை கடலோர காவல் படை அதிகாரிகள் அவரது மனைவியிடம் வழங்கினர். அதை பெற்று கொண்ட ராணுவ வீரரின் மனைவி கதறி அழுதது அங்குள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தூத்துக்குடியில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்து அவரது உடல் சொந்த ஊரான மேல கூட்டுடன் காடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது அந்த கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.