தமிழ்நாடு

கோவில் குளத்தில் மீன் பண்ணை நடத்த தடை - நீதிமன்றம் அதிரடி

கும்பகோணத்தில் உள்ள கோவில் குளத்தில் மீன் பண்ணை நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Malaimurasu Seithigal TV

இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

கும்பகோணம் ஐவர்பாடி கிராமத்தை சேர்ந்த தண்டபாணி குருக்கள் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், தனது முன்னோர்களால் 200 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அகஸ்தீஸ்வரர் சுவாமி  கோவிலை தனியார் கோவில் என 2002ஆம் ஆண்டில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதை மறு ஆய்வு செய்யும் வகையில் தற்போதுள்ள ஆணையர் தொடங்கியுள்ள விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், தந்தன் தோட்டம் பஞ்சாயத்து தலைவர் எந்தவித உரிமமும், அனுமதியும் இல்லாமல், அந்த குளத்தில் மீன் வளர்த்து விற்பனை செய்து, அதிக லாபம் ஈட்டியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மீன் வளர்க்கும் பண்ணையாக பயன்படுத்துவதற்கு தடை

பூஜை, அபிஷேகம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் கோவில் குளத்தை மீன் வளர்க்கும் பண்ணையாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கோவில் குளத்தில் விவகாரத்தில் தலையிட பஞ்சாயத்து தலைவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தெப்பக்குளத்தின் நீர்தான் பூஜைக்கு பயன்படுத்துகிறது என்பதை கருத்தில் கொள்ளாமல் மீன் வளர்ப்பதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாயத்து தலைவர் தலையிடக் கூடாது

எனவே தந்தன் தோட்டம் கிராமத்தில் உள்ள குளத்தில் மீன் வளர்க்கும் குளமாக பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டதுடன், அந்த குளம் தொடர்பான விவகாரத்தில் பஞ்சாயத்து தலைவர் தலையிடக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.