CPI exit DMK alliance CPI exit DMK alliance
தமிழ்நாடு

"ஸ்டாலின் அப்படி பேசியிருக்க கூடாது" - திமுகவில் இருந்து விலகுகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வெளியில் இருந்துதான் தவெக-விற்கு ஆதரவு!

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இல்லை. தற்போது உள்ள சூழலில் கூட்டணியில் இருக்க முடியாது

Vinvizhi Leninton

சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாகவே திமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சிகளும் விலகிவருகிறது. குறிப்பாக IUML, விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் விலகியதை தொடர்ந்து தவெக-விற்கு ஆதரவினை வழங்கின. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக விலகின. முதலில் வெளியில் இருந்து ஆதரவு என்று விசிக கூறிய நிலையில், தவெக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது விசிக மற்றும் IUML. இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது திமுக-வின் மதசார்பற்ற கூட்டணியில் இல்லை என்றும் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், வீரபாண்டியன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

கம்யூனிஸ்ட் கட்சி தனக்கேற்று ஒரு அமைப்பு நெறியை கொண்டுள்ளது. ஸ்டாலின் சந்தித்தபோது கூட அவர் எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டது இல்லை. எந்த அழுத்தமும் தந்தது இல்லை. இப்பொது அவர் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது. ஏனென்றால் அவருக்கும் தெரியும், நாடு மக்களுக்கும் தெரியும். கம்யூனிஸ்ட் கட்சி தனியல்பில் கூடி அமைப்பாக கூடி அது விவாதிக்கும், அரசியலாக முடிவெடுக்கும் என்று நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இல்லை. தற்போது உள்ள சூழலில் கூட்டணியில் இருக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

கூட்டணி சூழல் இப்பொது இல்லை. தவெக-விற்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக அவர் மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மக்கள் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஆளுநர் அந்த இடத்தில வந்து அமர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், மீண்டும் ஒரு தேர்தல் திணிக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காகவும் எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் அளித்த தீர்ப்பிற்கு மதிப்பு தரவேண்டும் என்ற காரணிகளுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். மேலும், பேசிய அவர், தற்போது திமுக கூட்டணியில், காங்கிரஸ், IUML, விசிக போன்ற காட்சிகள் கூட்டணியில் இல்லைனு. காங்கிரஸ் இருக்கிற இந்தியா கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என்ற திமுக கூறியதை சுட்டிக்காட்டி பேசினார். "இந்த முடிவை எடுப்பதற்காக ஜனநாயக சக்திகளை கடந்து சென்றுவிட மாட்டோம்" என்று வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். மேலும், சூழலை பொறுத்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது அறிவிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது தற்போது இல்லை, திமுக கூட்டணியும் இல்லை என்று கூறியிருந்தார். அவரைத்தொடர்ந்து தற்போது வீரபாண்டியனும் இதையே தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே திமுக தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், கள ஆய்வுகளை செய்துவரும் நிலையில், கட்சியில் பலரும் திமுக கூட்டணியில் இருந்தவர்கள் சரிவர தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறியிருந்தார்கள். மேலும், இதுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்றும் கூறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திமுக தலைமை என்ன முடிவெடுக்க இருக்கிறது?, வரப்போகும் தேர்தலை தனித்து சந்திக்குமா? என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.