சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த சிவகங்கை இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உண்மை காரணத்தை அறிந்து உடலை மீட்டு தர சகோதரரான ராணுவ வீரர் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருள் தேவதாஸ். ஞானதீபா ஆரோக்கிய சீலா தம்பதியர். இவர்களுக்கு ஸ்டீபன்ராஜ் (29), செங்கோல் ராஜ் என்கிற மகன்களும், மரிய பிரிசில்டா என்கிற ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மூத்த மகன் ஸ்டீபன் ராஜ் சிங்கப்பூர் நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இளைய மகன் செங்கோல் ராஜன் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
சிங்கப்பூரில் வேலை செய்து வந்த ஸ்டீபன்ராஜ் கடந்த அக்டோபர் 10ம் தேதி தான், சொந்த ஊர் வந்து மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் 13 ஆம் தேதி ஸ்டீபன்ராஜின் வேலை பார்க்கும் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர், செங்கோல்ராஜனை தொடர்பு கொண்டு “ஸ்டீபன்ராஜை காணவில்லை” என்றும் “அவர் ஊருக்கு வந்துள்ளாரா?” என்றும் சோதனை செய்யும்படி கூறியுள்ளார். இதனை அடுத்து செங்கோல்ராஜ் மற்றும் அவரது தந்தை அருள் தேவதாஸ் இருவரும் சிவகங்கை ஆட்சியர் அலுவலதிற்கு வந்து, சிங்கப்பூர் நாட்டில் காணாமல் போன ஸ்டீபன்ராஜை கண்டுபிடித்து இந்தியா அழைத்துவர அரசு ஆவணம் செய்ய கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளனர்.
இதையடுத்து ஞாயிற்று கிழமை மீண்டும் செங்கோல்ராஜனை தொடர்பு கொண்ட நிறுவன மேலாளர் அவரின் சகோதரர் ஸ்டீபன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அதனை இந்தியா அனுப்ப முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் தனது சகோதரர் ஸ்டீபன் ராஜ் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அதனை உரிய முறையில் விசாரணை செய்து உண்மையை கண்டறிவதுடன் அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சகோதரர் செங்கோல் ராஜன் மற்றும் அவரின் தந்தை அருள் தேவதாஸ் இருவரும் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியர் ஆகாசை சந்தித்து மனு அளித்தனர். மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோல் ராஜன், மத்திய மற்றும் மாநில அரசு தலையிட்டு, தனது சகோதரர் மரணத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு சொந்த ஊர் கொண்டு வர உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.