"பிளான் போட்டு கொன்னுருக்காங்க" - லாரி தீ விபத்து முதல் காவல் நிலைய மரணம் வரை.. மகன் முன்வைத்த அதிர வைக்கும் குற்றசாட்டுகள்!

"எங்க அப்பாவைத்தான் கொன்னுட்டிங்களே.." என்று மீண்டும் மீண்டும் அவர் கதறி அழுத்தவண்ணம் தெரிவித்தார்.
Madurai custodial death
Madurai custodial death
Published on: 
Updated on: 
3 min read

மதுரை கிராமப்புற எல்லைக்குட்பட்ட செக்கனூரணி காவல் நிலையத்தின் கழிவறைக்குள், 42 வயதான வாகன ஓட்டுநராக பாலகிருஷ்ணன் கடந்த சனிக்கிழமை (நவ 14) காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மகன் 'திட்டமிட்டு தனது தந்தை கொலை' செய்யப்பட்டிருப்பதாக கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழப்பு:

தேனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், விநியோகத்திற்காக லாரியில் கொண்டு சென்ற சுமார் 50 ஏலக்காய் மற்றும் மிளகாய்த்தூள் மூட்டைகள் தீப்பிடித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உதவுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (நவ 13) காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். தீ விபத்தின்போது மேலும் சுமார் 60 ஏலக்காய் மூட்டைகள் காணாமல் போனதாக விநியோக ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை, பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் இருந்த கழிவறையில் இறந்து கிடந்ததாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டது.

இறந்தவர் ஒரு விநியோக நிறுவனத்தின் சரக்கு விநியோக வாகனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், தேவாரத்திலிருந்து மதுரைக்கு ஏலக்காயை ஏற்றிச் சென்றபோது, ​​வலதூர் ஏரிக்கரை அருகே பாலகிருஷ்ணனின் வாகனம் தீப்பிடித்ததாகக் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை மாலை முதல் காவல் நிலையத்தில் இருந்து வந்ததாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பாலகிருஷ்ணன், காவல் நிலையத்திற்குள் இருந்த கழிவறைக்குச் சென்றபோது, ​​காலை 6 மணியளவில் சுயநினைவின்றி காணப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர், காவல்நிலையத்தில் இருந்து அவசர மருத்துவ சிகிச்சைக்காக பாலகிருஷ்ணன் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், காவல்நிலையத்தில் பாலகிருஷ்ணன் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டன. இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மேலும் இரண்டு காவலர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின்னர், வழக்கின் விசாரணையை சுதந்திரமாக கையாளும் பொருட்டு, பாலகிருஷ்ணனின் மரணம் தொடர்பான விசாரணையை சிபி-சிஐடி-க்கு மாற்றியுள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, இதில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டி, பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் அவரது உடலை ஏற்க மறுத்ததுடன், நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் தெரிவித்தனர்.

பாலகிருஷ்ணன் மகனின் பரபரப்பு புகார்:

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் பாலகிருஷ்ணனின் உடலினை வாங்கமறுத்ததுடன் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவரது மகனான விகாஸ் வேனுக்கு அடியில் படுத்தவண்ணம் ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை பத்திரமாக போலீசார் மீட்டுள்ளனர். அப்போது அவர், "எங்க அப்பாவைத்தான் கொன்னுட்டிங்களே.." என்று மீண்டும் மீண்டும் அவர் கதறி அழுகிறார். அவரை குண்டுக்கட்டாக தூக்கி காவல்நிலைய வாகனத்தில் காவலர்கள் அழைத்து சென்றனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விகாஸ், "ஒரு 22 அடி வண்டியில இத்தனை டன்தான் ஏற்றணும்னு ரூல்ஸ் இருக்கு.

Madurai custodial death
Madurai custodial death

ரூல்ஸ தண்டி அவங்க 150 மூடை ஏத்திருக்காங்க. எரிஞ்ச அன்றைக்குமே ஏலக்காய் மூடை மட்டுமில்லாம கடலை மூடையும் வச்சிருக்காங்க. பிளான் போட்டு இன்சூரன்ஸ் கிளைம் பண்ணனும்னு சொல்லி, உள்ள கடலை மூடையும் வச்சிருக்காங்க. 'பிளான் போட்டு கொலை பண்ணிருக்காங்க'. சம்பவத்தன்று மூடை எரிஞ்சதா அப்பா எனக்கு சொன்னாரு. ஆனா அவரால கதவை திறக்கமுடியாது, ஏன்னா அதுல இருக்குறது டிவைஸ் லாக். அதுனால நாகராஜ்.. அவரு மேனேஜர் போல அவருக்கு போன் பண்ணி டிவைஸ் எடுத்துட்டு வர சொல்லிருக்காரு. நேருல வந்து அவங்கதான் அணைச்சிருக்கிங்க. அதுவரை அப்பாக்கு தீப்பிடிச்சிருக்குன்னுதான் தெரியும். உள்ள என்ன தீப்பிடிச்சிருக்கு? எவ்ளோ தீப்பிடிச்சிருக்குன்னு தெரியாது. அதுக்குப்பிறகு, வண்டிய போலீஸ் ஸ்டேஷன்-க்கு எடுத்துட்டு போகாம.. அவங்க (நிறுவனம்) ஹப்-க்கு எடுத்துட்டு போயிருக்காங்க. அப்பாவை மட்டும் அன்னைக்கு விசாரணைக்காகன்னு சொல்லி அழைச்சிட்டு போய்ட்டாங்க. இப்போ வரைக்குமே போலீசுக்காரங்களோ, அந்த கம்பெனியோ தகுந்த நடவடிக்கை எதுவுமே எடுக்கல" என்று சம்பவத்தை பற்றி விவரித்தார்.

பின்னர் செய்தியாளர்கள், காவல்துறை சார்பில் வெளியிட்ட சிசிடிவி கட்சியை குறித்து கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த விகாஸ், "அப்பா எப்பவுமே எதையுமே ஒரு வேகத்தோட செய்யுறவரு.. அவரை அடிச்சிருக்காங்க, அவரு சோர்ந்து போயிருக்காரு" என்று பதிலளித்தார். மேலும், இறுதியாக அவரது தந்தை பேசியதாக அவரது மகன் கூறியது, "சம்பவத்தன்று மதியம் 2 மணிபோல, போலீஸ் ஸ்டேஷன்-ல உக்கார்ந்திருக்கேன், கூப்புடுறேன் டா-னு சொன்னாரு. மாலை 4 மணியில இருந்து 6 மணிக்குள்ள இருக்கும் அப்போ, எல்லாருமே என்னய மாட்டிவிடணும்னு பார்க்குறாங்க. அவங்க அவங்க தப்பிக்கிறதுக்குத்தான் பார்க்குறாங்க. நாகராஜ் மேனேஜர நம்புனோம், அவருமே ஏமாத்தணும்னுதான் பார்க்குறாருனு சொல்லி அப்பா சொன்னாரு.

அதுக்கு அப்பறம் இரவு 8-9 மணிக்கு போன் பண்ணா போன் ஸ்விட்ச் ஆஃப்.. காலையில எழுந்துருச்சி போன் போடுறேன் ஸ்விட்ச் ஆஃப்" என்று அவரது தந்தை இறுதியாக தன்னிடம் பேசியதை அவர் தெரிவித்தார். மேலும், தனது தாய்தான் காலையில் தந்தை இறந்துவிட்டதை கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்திற்கு தகுந்த பதில் கிடைக்கும் அவரை தனது தந்தையின் உடலை வாங்கப்போவதில்லை என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். குற்றாவளிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்டு சிறையில் அடைக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனது தந்தை வேலை செய்த நிறுவனத்தின் மீதும், போலீசார் உள்ளிட்ட அனைவரின் மீதும் சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், அந்த அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் விகாஸ் பரபரப்பு புகாரினை முன்வைத்துள்ளார். ஏலக்காயின் தேவை குறைந்துவிட்டதால் இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாகவும், அதன் மூலம் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய நினைப்பதாகவும் அவர் குற்றசாட்டுகளை முன்வைத்தார். இதற்கு முன்னும் இதே போல் 3 முறை அந்த நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் இன்சூரன்ஸ் கிளைம் செய்ததாக தனது தந்தை கடந்த 12-ம் தேதி தன்னிடம் கூறியதாகவும் விகாஸ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கூறினார்.

காயங்கள் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தோள்பட்டையில் ஊசியான ஒன்றினை வைத்து குத்தியது போன்ற காயமும், முதுகு பக்கத்தில் லத்தியால் அடித்துள்ளதாகவும், முதுகு பக்கத்தில் பெரியதாக வீங்கி இருப்பதாகவும், பின்பக்கத்திலும் லத்தியை வைத்து அடித்துள்ளதாகவும், இரும்பாலான ஒன்றினை வைத்து நெற்றி பக்கத்தில் வைத்து அடித்தது போன்று நெற்றியில் தெரிவதாகவும், நகங்களை பிடிங்கியதாகவும் விகாஸ் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கட்டாயம் வேண்டும் என்றும் FIR பதியாமல் இரவு நேரத்தில் எதற்கு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள் என்ற பதிலும் வேண்டும் என்றும், அவர்கள் வெளியிட்ட சிசிடிவி காட்சிகள் முழுமையாக வெளியிடவேண்டும் என்றும், வெளியிட்ட சிசிடிவி கட்சியில் அரைமணி நேரம் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் விகாஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.