tamilnadu cm and karnataka cm  
தமிழ்நாடு

“முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம்” - தொடர்ந்து நீடிக்கும் காவிரி நீர் பிரச்சனை.. முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேட்டி!

தமிழக முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின...

Mahalakshmi Somasundaram

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தைச் சுற்றி தமிழகம் - கர்நாடகா இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகா பயணத்தை தற்போதைக்கு தவிர்க்குமாறு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின் அளவைப் பொறுத்து, தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட வேண்டிய நீர் தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி, நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை அமைப்புகள் வரை விவகாரம் செல்வது வழக்கமாக உள்ளது.

வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், கர்நாடக அணைகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் திறந்து விடப்படாததால், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்து, குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மீண்டும் முன்னெடுத்து வருவது தமிழகத்தில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தவும், இரு மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்றுக் குழு, அடுத்த 15 நாட்களுக்கு தினமும் தமிழகத்திற்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், தங்களது அணைகளிலேயே போதுமான அளவு நீர் இல்லை என்பதால் அந்த உத்தரவை செயல்படுத்த முடியாது என்றும், இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் கர்நாடக பயணத்திற்கு அங்குள்ள சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், "தற்போது கர்நாடகாவில் நிலவும் சூழ்நிலை சாதகமாக இல்லை. எனவே, தமிழக முதலமைச்சர் விஜய் தற்போதைக்கு கர்நாடகா வருவதைத் தவிர்ப்பது நல்லது என்று கேட்டுக்கொண்டேன். இதுகுறித்து அவருடன் பேசியுள்ளேன். சூழ்நிலை சீராகிய பிறகு நல்ல சூழலில் சந்தித்து பேசலாம்" என்று தெரிவித்தார். காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை திட்டம் மற்றும் இரு மாநிலங்களின் அரசியல் சூழல் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன நிலையில், தமிழக முதலமைச்சரின் கர்நாடக பயணம் நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.