

பிரபல சமையல் கலைஞர், தொழிலதிபர் மற்றும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான சட்டப் போராட்டம் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. திருமணம், குழந்தை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு திருப்பங்களை சந்தித்த இந்த வழக்கில், தற்போது முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கி பின்னர் கைவிட்டதாகக் கூறி, ஜாய் கிரிசில்டா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, ரங்கராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதே விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தபோதே ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்றும், தன்னை ஏமாற்றியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, சமூக வலைதளங்களில் ஜாய் தொடர்ந்து பல வீடியோக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வந்தார். இதனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
வழக்கு விசாரணையின்போது, குழந்தையின் தந்தைத்துவத்தை உறுதி செய்ய மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை நடத்த வேண்டும் என்று ஜாய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், அந்த பரிசோதனை முடிவில் குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் சொந்த மகன்தான் என்பது உறுதியானதாக ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதள பதிவின் மூலம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையிலான நீண்ட நாள் சர்ச்சை புதிய திருப்பத்தை எட்டியது. இந்த நிலையில், நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த ஆறு மாதங்களாக என் மகன் ராகாவுக்கு ஒரு தந்தையாக எனது கடமைகளை முழுப் பொறுப்புடனும் அன்புடனும் நிறைவேற்றி வருகிறேன். இனிமேல் ராகா ரங்கராஜின் நல்வாழ்வு, மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்கு முழுப் பொறுப்புடனும் அன்புடனும் ஆதரவளிப்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுடன், தனது மகன் ராகாவை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். அதே புகைப்படத்தை ஜாய் கிரிசில்டாவும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "தந்தையும் மகனும்" என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததுடன், இருவரும் குழந்தையின் நலனை முன்னிறுத்தி முன்னேற முடிவு செய்துள்ளனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அவரது எதிர்காலத்திற்கு முழுப் பொறுப்பு ஏற்கப்போவதாக அறிவித்திருப்பது இந்த வழக்கில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையிலான பிற சட்ட வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.