Tamil writer Poomani Tamil writer Poomani
தமிழ்நாடு

'அசுரன்' படத்திற்கு உயிர் கொடுத்த 'வெக்கை'.. நாவலாசிரியர் பூமணி காலமானார்! கரிசல் காட்டின் கடைசி தூணும் சாய்ந்தது

தமிழ் இலக்கியத்தில் படிக்க வேண்டிய முக்கியமான நாவல்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Vinvizhi Leninton

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான எழுத்தாளர் பூமணி தனது 79-வது வயதில் காலமானார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் 1947 மே 12-ம் தேதி பிறந்த பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி துணைப் பதிவாளராக ஓய்வு பெற்ற இவர், பின்னர் முழுநேர இலக்கியப் பணியில் ஈடுபடத்தொடங்கினார்.

மேலும், கரிசல் மண்ணின், மக்களின் வாழ்வியல், சமூக உறவுகள், சாதி அமைப்பு, உழைப்பாளர்களின் வாழ்க்கை உள்ளிட்டவற்றை யதார்த்தமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பூமணி.

இவரது மற்ற பிற நாவல்கள்,

  • 'பிறகு',

  • 'வெக்கை',

  • 'நைவேத்யம்',

  • 'வரப்புகள்',

  • 'வாய்க்கால்',

  • 'அஞ்ஞாடி'

உள்ளிட்ட அவரது நாவல்கள் தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்த 'அஞ்ஞாடி' நாவல் ஒரு சாதாரண கதையல்ல; தென் தமிழகத்தின் சமூக வரலாற்றை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, சாதி அரசியலை மற்றும் மனிதநேயத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ள ஒரு வரலாற்று சமூகக் காவியம். தமிழ் இலக்கியத்தில் படிக்க வேண்டிய முக்கியமான நாவல்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தென் தமிழகத்தின் சமூக வரலாற்றை ஆழமான ஆய்வின் அடிப்படையில் பதிவு செய்த இந்த நாவல் தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'அசுரன்' திரைப்படம் தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் பூமணியின் படைப்புகள் புதிய தலைமுறையினரிடமும் பரவலாக சென்றடைந்தது எனலாம்.

இதற்கு முன் சாகித்ய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர்

கி. ராஜநாராயணன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கோவில்பட்டியில் நினைவு அரங்கம் அமைக்கப்பட்டது. அதேபோல் இவருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதையும், நினைவு அரங்கமும் அமைக்க வேண்டும் என எழுத்தாளர்களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அவரது உடல் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு உறவினர்கள் சார்பில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

மேலும், சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பு என்றும் எழுத்தாளர்களால் கூறப்படுகிறது. கரிசல் இலக்கியத்தில் கி. ராஜநாராயணனுக்கு அடுத்தபடியாக மிக முக்கிய தூணாக இருந்தவர் பூமணி, என சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி நேற்று இரவு சென்னையில் காலமானார். அவருடைய நினைவுகள் குறித்தும், அவருடைய நாவல்கள் குறித்தும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மற்றொரு சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

"மறைந்த எழுத்தாளர் பூமணி எழுத்தாளர் மட்டுமல்ல என்னுடைய நெருங்கிய உறவினர். கரிசல் இலக்கியத்தில் கி. ராஜநாராயணனுக்கு அடுத்தபடியாக மிக முக்கிய தூணாக இருந்தவர் பூமணி. அவருடைய படைப்புக்கள் கரிசல் இலக்கிய மக்களின் வாழ்க்கை குணாதிசயங்கள், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பதிவு செய்யக் கூடியதாக இருக்கும்".

"அவரைப் போன்று ஒரு சிறுகதையை யாரும் எழுத முடியாது என்று எழுத்தாளர்கள் சொல்வார்கள். 2014ல் அவர் எழுதிய 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்திய விருது பெற்றார். அதன் அடிப்படையில் கடந்த திமுக அரசு வழங்கிய 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் சென்னையில் வசித்து வந்த அவர் நேற்று இரவு காலமாகியுள்ளார்.

கி. ராஜநாராயணன் எப்படி ஒரு எழுத்தாளர் பட்டாளத்தை உருவாக்கி சென்றாரோ, அதை தொடர்ந்து எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் மறைந்த எழுத்தாளர் பூமணி. கி. ராஜநாராயணன், பூமணி இருவரும் இல்லை என்றால் நான் சாகித்திய அகாதமி விருது வாங்கியிருக்க முடியாது" என்று பேசினார் எழுத்தாளர் சோ. தர்மன்.

மேலும் பேசிய அவர், "அவர் எழுதிய புத்தகங்களில் சாகித்ய அகதாமி விருது பெற்ற 'அஞ்ஞாடி' நாவலை விட என்னைக் கவர்ந்தது 'வெட்கை' நாவல்தான். அதுதான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' திரைப்படமாக வந்தது. கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணன், பா. செயபிரகாசம், பூமணி மூன்று பேரும் மறைந்து விட்டனர். அடுத்த தலைமுறை நான், எனக்கு பிறகு கரிசல் இலக்கியம் எழுதுவதற்கு ஆள் இல்லை. உருவாக்க வேண்டும். இதை நான் நிறைய இடங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். நிறைய இளைஞர்கள் எழுதுகின்றனர் ஆனால் கரிசல் இலக்கியங்களை எழுதுவதில்லை" என்று மனமுடைந்து பேசினார் சோ. தர்மன்.

மேலும், "கரிசல் வாழ் மக்களுடன் இருப்பது, அவர்களுடன் வாழ்வதால்தான் கரிசல் மாந்தர்களை கதையில் கொண்டு வர முடிந்தது. கரிசல் பிரச்சனை என்றால் தண்ணீர் பிரச்சனைதான் என்னுடைய நாவல்கள் எல்லாம் பேசுகிறது" என்று பேசினார். ஒரு எழுத்தாளராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் பூமணி இருந்துள்ளார். முன்பு சாத்தூர் பகுதியில் 'பேனா நிப்பு' தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கும் அந்த தொழிலாளர்களின் வாழ்வியல் குறித்து ஒரு மறைந்த எழுத்தாளர் பூமணி 'பேனாக்கள்' என்ற பெயரில் ஒரு குறும்படம் இயக்கி உள்ளார். அதேபோன்று தேசிய திரைப்படக் கழகத்தின் உதவியுடன் தீப்பெட்டி தொழிலாளர்கள், குழந்தைகளின் வாழ்வியல் குறித்து 'கருவேலம் பூக்கள்' என்ற பெயரில் திரைப்படம் எடுத்துள்ளார். அவருடைய 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு 'அசுரன்' திரைப்படம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் அவருடைய கணிசமான பங்கினை திரைப்படத்துறைக்கும் கொடுத்துள்ளார்.

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மறைவின்போது திமுக அரசு மரியாதை கொடுக்கப்பட்டு அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் காலமான 'சாகித்திய அகடாமி விருது' பெற்ற எழுத்தாளர் புவியரசுக்கும் தற்போதைய ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, அரசு மரியாதை கொடுத்துள்ளது. அதேபோன்று மறைந்துள்ள 'சாகித்யா அகாடமி விருது' பெற்ற எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் அரசு மரியாதை கொடுத்து கௌரவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் எழுத்தாளர் சோ. தர்மன். மேலும், மறைந்த எழுத்தாளர் பூமணியின் இறுதிச் சடங்கு நாளை காலை கோவில்பட்டியில் நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்