பாஜகவில் இருந்து விலகிய பிறகு, அண்ணாமலை தொடங்கியுள்ள 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் முதல் மாநில மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று நடைபெற்றது. "போதையில்லா தமிழகம்" என்ற இலக்கை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். குறிப்பாக, Gen Z எனப்படும் இளம் தலைமுறையினரின் பங்கேற்பு அதிகளவில் இருந்தது. மாநாட்டு மேடையிலும் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தனது உரையிலும் அண்ணாமலை பெரும்பாலும் இளைஞர்களை மையமாகக் கொண்டே பேசினார்.
மாநாட்டில் உரையாற்றிய அண்ணாமலை, "Gen Z இளைஞர்களிடம் பேச முடியாது, அவர்கள் நினைத்ததை மட்டுமே செய்வார்கள் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இந்த மேடையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் Gen Z தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரும் அந்த தலைமுறையைச் சேர்ந்தவர்தான்" என்றார். மேலும், "வீ த லீடர்ஸ் அமைப்பில் தற்போது 19 லட்சம் பேர் இணைந்துள்ளனர். அதில் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் 14 சதவீதமும், 26 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் 40 சதவீதமும் உள்ளனர். மொத்தத்தில், 39 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 53 சதவீதம் பேர் கொண்ட இளைஞர் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இளைஞர்களின் குரலை நாம் கேட்க வேண்டும். அவர்களின் சிந்தனை வித்தியாசமானது. சமூகத்தை அவர்கள் வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். மாற்றம் வேகமாக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த எண்ணமே சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமைகிறது" என்றார். அத்துடன், "39 வயதிற்குக் கீழ் உள்ள இளைஞர்கள்தான் 2026-ல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கினர். அதேபோல், 2031-லும் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை" என்று நம்பிக்கை தெரிவித்தார். பொள்ளாச்சியில் நடைபெற்ற 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாட்டில், இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு, சமூக மாற்றம் மற்றும் எதிர்கால தலைமுறையின் பங்கு குறித்து அண்ணாமலை பேசியது கவனம் பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்