"நாளை மழைப்பொழிவு செஞ்சுரி அடிக்கப்போகுது".. புள்ளி விவரத்துடன் புட்டு புட்டு வைத்த வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் - மக்களே உஷார்! https://mausam.imd.gov.in/responsive/satellite.php
தமிழ்நாடு

"நாளை மழைப்பொழிவு செஞ்சுரி அடிக்கப்போகுது".. புள்ளி விவரத்துடன் புட்டு புட்டு வைத்த வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் - மக்களே உஷார்!

சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

Antony Ajay R

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை (26.11.2026) வியாழக்கிழமைக்கான வானிலை முன்னெச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஏற்படவுள்ள வானிலை மாற்றங்கள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

"தமிழ்நாட்டில் ஈரமான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பல மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்" என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட தமிழக மாவட்டங்களிலும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

அதன் விளைவாக இன்று மாலை முதலே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் வானிலை அயர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், "நாளை (26.11.2026): திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்." என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "கே.டி.சி.சி (சென்னை) தவிர, தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை காலைக்குள் பல சதங்கள் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது." எனக் கூறியுள்ளார்.

இந்த தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கியது முதலே தமிழ்நாடு எதிர்பார்த்த மழைப் பொழிவைப் பெறவில்லை. இதுவரை உருவான மூன்று புயல்களும் ஆந்திரா பக்கம் சென்றதால் தலைநகர் சென்னையிலும் கூட மழைப்பொழிவு குறைவுதான்.

இந்த நிலையில் 100 மி.மீ-க்கும் அதிகமாக மழை கிடைக்கும் என்ற கணிப்பு விவசாயிகளுக்கு ஆறுதலாக வந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.