

நேற்றைய தினம் கார்த்திகை திருநாளில் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு மக்கள் வழிபாடு செய்தனர்.
முன்னதாக மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் அந்தக் கல்லில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு அளித்திருந்தது.
ஆனால் இந்த தீர்ப்புக்கு மாற்றாக பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வில் தெரிவித்தது.
இன்று, நீதிமன்றத்தில் பொய்யான தகவலை தெரிவித்த அதிகாரிகள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டும் என ரமேஷ் என்ற மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
அப்பொழுது வழக்காக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன் என நீதிபதி சாமிநாதன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வில் நடந்த விசாரணையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பபட்டது.
அந்த அறிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், ஆனால் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான நபர்களின் பெயர்களை கோவில் நிர்வாகம் வழங்கவில்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகவும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் விளக்கத்தை ஏற்காத எதிர்தரப்பு, உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே ஏற்றப்பட்ட தீபத்தை எடுத்துச் சென்று தீபத்தூணில் ஏற்றியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோருபவர்கள் அதற்குரிய மனுவை தனியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் அறங்காவலர் குழு வெளியிட்ட அறிக்கையில், "கோவில் நிர்வாகம் கார்த்திகை மகாதீபத்தை வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்திலேயே ஏற்ற முடிவு செய்திருந்தது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள், ஆகம விதிகள் மற்றும் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் மரபுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறங்காவலர் குழு விளக்கியிருந்தது.
இதன் காரணமாக, தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குச் செல்ல வேண்டிய நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் இன்னும் எரிந்துகொண்டிருக்கும் தீபத்தை சர்ச்சைக்குரிய கல்லுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், "கார்த்திகை தீபம் 11 நாள்கள் வரை எரியக்கூடியது. எனவே, விழா நாள் முடிந்துவிட்டாலும், அதிகாரிகள் நினைத்தால் இப்போதும் தீபம் ஏற்ற முடியும்." எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு தமிழக அரசு எப்படி பதிலளிக்கப்போகிறது என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்