Chennai weather update 
தமிழ்நாடு

"சென்னைக்கு மீண்டும் 'ரெட் அலர்ட்'.. ஆனால் பயப்பட வேண்டாம்" - தனியார் வானிலை ஆய்வாளர் கொடுத்த முக்கிய அப்டேட்!

இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருந்தாலும் நேற்றைய வீரியம் இன்று இருக்காது. அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Vinvizhi Leninton

பருவ மழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்றைய தினம், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி காணப்பட்டது. இந்நிலையில் இன்றும் (அக் 18) சென்னைக்கு 'ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் நேற்றைய அளவிற்கு மழையின் தீவிரம் இருக்காது, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

பல நாட்களான 'எல் நினோ' தாக்கத்தால் தமிழகம் மற்றுமின்றி உலகமே வெயிலில் வாடி இருந்த நேரத்தில்தான் தற்போது மழை வர தொடங்கியுள்ளது. இது சற்றே குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது எல்லாருக்கும் பொருந்துமா? என்று கேட்டால் இல்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதீத கனமழை பெய்தது. குறிப்பாக இரவு மற்றும் நள்ளிரவு சமயத்தில் அதீத கனமழை பெய்ததால், சாலை நெடுகிலும் மழை நீர் வெள்ளமென சூழ்ந்து காணப்பட்டது. இடி, மின்னலுடன் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

இது ஒருவேளை, 'மேக வெடிப்பாக' இருக்குமோ? என்று பலராலும் சந்தேகிக்கப்பட்டது. குறுகிய பரப்பளவில் மிகக் குறுகிய நேரத்தில் மிக அதிக அளவில் மழை பெய்வது மேகவெடிப்பு எனப்படுகிறது. வடசென்னையின் கார்கில் நகரில் 10.9 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் மெப்பேடு பகுதியில் 10 செ.மீ. மழையும் பதிவானதாகத் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பதிவாகியுள்ளது. அதில்,

  • பாரிமுனை – 36 செ.மீ.

  • கத்திவாக்கம் – 34.4 செ.மீ.

  • மீனம்பாக்கம் – 29 செ.மீ.

  • சென்னை சென்ட்ரல் – 27 செ.மீ.

  • சாத்தாங்காடு – 26 செ.மீ.

  • திருவொற்றியூர் – 22 செ.மீ.

  • எண்ணூர் – 21 செ.மீ.

  • கார்கில் நகர் – 19 செ.மீ.

  • சைதாப்பேட்டை – 17 செ.மீ.

  • வடபழனி – 16 செ.மீ.

  • நுங்கம்பாக்கம் – 15 செ.மீ.

தற்போது, இன்றும் சென்னைக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பொதுமக்களின் தொலைபேசிக்கு அலர்ட்-டும் (எச்சரிக்கை) கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் சென்னை உட்பட வட மாவட்டங்களில் இன்று இரவு/நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருந்தாலும் நேற்றைய வீரியம் இன்று இருக்காது. அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், சென்னைக்கு பேரிடர் மீட்புக்குழு தற்போது விரைந்துள்ள நிலையில், சென்னை அடுத்து பெரிய மழை பெய்தாலும் அதை தாங்கும் அளவிற்கு தயாராகி வருகிறது என்றே எடுத்துக்கொள்ளலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.