clash between anbumani and ramadoss  
தமிழ்நாடு

பாமக -வில் வலுக்கும் தந்தை - மகன் மோதல்..! ஆத்திரத்தில் அன்புமணி செய்த காரியம்..!

அன்புமணியின் தலைவர் பதவி மே மாதத்துடன் நிறைவடைந்து விட்டதாக ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் முறையீடு ...

Saleth stephi graph

கடந்த சில நாட்களாகவே பாமகவிற்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற  பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார். இது பாமக -வில் பெரும் பதட்டத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.

கடந்த 2024 -ஆம் ஆண்டு ராமதாஸின் மகள் வயிற்று பேரன் முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மேடையிலேயே அன்புமணி காட்டமாக பேசியிருந்தார். இதுதான் கட்சியின் பிரச்சனைக்கு துவக்கப்புள்ளி. அப்போது தொடங்கிய தந்தை - மகன் பூசல் இதுநாள் வரை நீடிக்கிறது. மேலும் ராமதாஸ் கட்சியிலிருந்து விலக்கும்  நிர்வாகிகளை எல்லாம்  அன்புமணி மறு நியமனம் செய்து வருகிறார். இதனால் தொண்டர்களும் நிர்வாகிகளும் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

செயற்குழு

இந்நிலையில் நேற்று  திண்டிவனம் ஓமந்தூரார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவன தலைவருக்கு கட்டுப்படாமல் அன்புமணி செயல்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக செயற்குழுவில் தீர்மானம்

தேர்தல் ஆணையம் 

அன்புமணியின் தலைவர் பதவி மே மாதத்துடன் நிறைவடைந்து விட்டதாக ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளனர்.

தலைவர் பதவியை ராமதாஸ் எடுத்துக்கொண்டதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளனர். 2026 ஜூன் மாதம் வரை தலைவர் பதவி உள்ளதாக அன்புமணி தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளனர்.

அன்புமணியின் தலைவர் பதவி காலம் இன்னும் முடியவில்லை கால அவகாசம் உள்ளது என தேர்தல் ஆணையத்தில் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார். செவ்வாய்க்கிழமை டாக்டர் ராமதாஸ் தரப்பு போட்டி செயற்குழு கூட்டம் செல்லாது. செயற்குழு கூட்டம் போடுவதற்கு 15 நாட்கள் முன்னதாக அறிவிப்பு வெளியிட வேண்டும். ராமதாஸ் தரப்பினர் 4 5 நாட்களுக்கு முன்னர் அறிவித்துவிட்டு செயற்குழுவை கூட்டியுள்ளார் அது செல்லாது. பாமக சட்டவிதி படி தலைவர் தலைமையில் தான் செயற்குழு பொதுக்குழு நிர்வாக குழு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். தலைவரே இல்லாமல் நடத்தப்பட்ட செயற்குழு செல்லாது என அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது. ஒருவேளை இந்த சண்டை மேலும்  வலுவடைந்து கட்சி உடைந்தால், சின்னம் பறிபோகும் வாய்ப்பும் உண்டு என்கின்றனர் ஆர்வலர்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.