தமிழ்நாடு

"வெளியே போ".. அண்ணன் தம்பியாக இருந்த திமுக - விசிக இடையே கடும் மோதல்.. அதுவும் சென்னையில்.. மேயர் பிரியா சொன்ன அந்த "வார்த்தை"

மேயர் பிரியா விளக்கமளித்த பின்பும், விசிகவினர் அமளியில் ஈடுபட்டதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

Muthu Lakshmi

இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்  கூடியது. இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டு முக்கிய பிரச்சனைகள்  குறித்து ஆலோசனை நடந்தது. அதில் உரையாற்றிய சென்னை மேயர் பிரியா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு, நிர்வாகச் சீர்கேடு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தற்போது தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். தவெக அரசு பொறுப்பேற்ற பின் பால், மின்சாரக் கட்டணம் உயர்வு, மின் தடை உள்ளிட்டவற்றால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஏமாற்றும் வேலை, தலைமைப் பண்பு இல்லாமை, மற்றவர்கள் மீது பழி போடுவது ஏமாற்றும் வேலை, எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சட்டமன்றத்தில் தொடர்பில்லாததை பேசுகின்றனர் போன்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார் மேயர் பிரியா.

இதையடுத்து சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அம்பேத்கர் படம் இடம் மாற்றி வைக்கப்பட்டதாகக் கூறி விசிக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அம்பேத்கர் புகைப்படத்தை இடம் மாற்றியது குறித்து கேள்வி எழுப்பியதோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். “அம்பேத்கர் புகைப்படம் இத்தனை நாட்கள் இருந்த இடத்தை விட்டுவிட்டு மற்றொரு இடத்திற்கு ஏன் மாற்றுகிறீர்கள்? காந்தி புகைப்படம், முன்னாள் முதலமைச்சர் புகைப்படமும் இருக்கலாம். ஆனால் ஏன் அம்பேத்கர் புகைப்படத்தை இடம் மாற்றுகிறீர்கள்? விசிக மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா.. “அம்பேத்கர் படம் இங்கு இருந்ததில்லை, அதை திமுகதான் மாமன்றத்தில் இடம் பெற செய்தது; ஏதோ குறை சொல்வதற்கு என்று சொல்லக்கூடாது. 2023 ஆம் ஆண்டு அம்பேத்கரின் புகைப்படத்தை இந்த வரலாற்று சிறப்புமிக்க மாமன்றத்தில் வைத்தது திராவிட மாடல் அரசு” என்றும் குறிப்பிட்டார். 

மேலும் “அம்பேத்கருக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அவர் அனைவருக்குமான தலைவர். அம்பேத்கர் கொள்கையைப் பின்பற்றி திட்டங்களை வகுத்தது திமுக” என்று விளக்கம் அளித்தார். மேயர் பிரியா விளக்கமளித்த பின்பும், விசிகவினர் அமளியில் ஈடுபட்டதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து விசிக மாமன்ற உறுப்பினர்கள் சென்னை மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

2001ல் முதல் முறையாக திமுகவுடன் விசிக கூட்டணி அமைத்தது. பின்னர் அடுத்தடுத்த தேர்தல்களில் இந்த கூட்டணியில் சில முறிவுகளை ஏற்பட்டது. 2009 மக்களவை தேர்தல், 2011 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 மக்களவை தேர்தலில் திமுக, விசிக இடையேயின கூட்டணி வலுவானதாக தொடர்ந்தது. பிறகு 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் நல கூட்டணி உருவானது. பின்னர் மீண்டும் விசிக - திமுக கூட்டணி இணைந்து, 2019 முதல் 2026 வரை சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஏதிர்கொண்டனர். 

இந்த காலக்கட்டங்களில் தான் விசிக திமுக கட்சியினர் அண்ணன் தம்பியாக வலம் வந்தனர். திமுக ஆட்சியில் நடந்த பிரச்சனைகளுக்கு விசிக பதில் சொல்வதும், சில இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாகவும் செயல்பட்டனர். நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளியாக வந்தது. விஜயின் வருகை தமிழக தேர்தலில் மட்டுமின்றி 20 வருட கூட்டணிகளையும் காலி செய்தது. அதில் விசிகவும் ஒன்று. விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இருவருக்குமான உறவும் அண்ணன் தம்பி உறவாகவே தொடர்ந்தது. தமிழக அரசியலில் “கண்ணுப்பட போகுதய்யா” னு சுற்றிவந்த இருவரையும் இரு துருவங்களாக பிரித்தது இந்த தேர்தல் முடிவு. தலைவர்கள் மட்டுமின்றி திமுக மற்றும் விசிக தொண்டர்களிடையேவும் வர்த்தியா மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அம்பேத்கர் புகைப்படம் இடம் மாறியதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இரு கட்சியினருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் மூண்டு வருகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்