

திமுகவைச் சேர்ந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிகால் பகுதியில் உள்ள தென்றல் நகரில் திமுகவைச் சேர்ந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை வீட்டில் 20 க்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக பதிவி வகித்து வருபவர் சி.என்.அண்ணாதுரை.
கடந்த திமுக ஆட்சியில் பல கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஒப்பந்தம் எடுத்து, பல்வேறு பணிகளை செய்து வருவதால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை என்பவர் APU Constructions என்ற நிறுவனம் மூலம் 50க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் வீடு கட்டுவதற்காக கான்கிரீட் மெஷின் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒப்பந்தம் எடுத்து சாலை அமைத்தல் மற்றும் மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செய்து வருவதால், அதில் முறைகேடுகள் நடத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது அதிக அளவில் பணம் சேர்த்து வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சி.என். அண்ணாதுரை, எ.வ வேலுவின் தீவிர ஆதரவாளர். எ.வ வேலு, கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் எ.வ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு தொடர்பாகவே அந்த சோதனையும் நடந்ததால், எதிர்க்கட்சி கொறடாவை லஞ்ச ஒழிப்புத்துறை சுற்றி வளைக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
APU Constructions நிறுவனத்தில் அண்ணா துரையுடன் எ.வ வேலு மற்றும் அவரது மகனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் கூறியிருப்பது கூறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்