தமிழ்நாடு

சென்னையைச் சுற்றி வளைக்கும் மேகங்கள்.. அடுத்த 3 நாட்களுக்கு மழை வெளுக்குமா? 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வைப் பொறுத்து உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பரவக்கூடும்

Muthu Lakshmi

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பு. புதுச்சேரி காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு 

நேற்று இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் (21.10.26) நகரம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் ஆலந்தூர், வடபழனி, மதுரவயால், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நகரின் ஒட்டுமொத்த சராசரி மழை அளவு 7.3 செ.மீ ஆகும். காலை நேரத்திலும் மழை எதிர்பார்த்தபடியே பெய்யும் என்று சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரான் தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றுச் சுழற்சி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் தற்போது மழை மேகங்கள் காணப்படுகின்றன. சென்னை வடக்குப் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்று விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வைப் பொறுத்து உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பரவக்கூடும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு மழை தீவிரமடையாத நிலையில், தற்போதைய வானிலை மாற்றத்தால் சம்பா சாகுபடி பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் விட்டுவிட்டு கனமழை பெய்யக்கூடும்.

மொத்தத்தில், தற்போதைய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.