விடிய விடிய கொட்டிய மழை.. சென்னையில் 100 மி.மீ.யைத் தாண்டியது! இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்வதாகவும், காலை 8.30 மணிக்குள் சில பகுதிகளில் மழைப்பொழிவு 100 முதல் 150 மி.மீ. வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும்
chennai rain
Published on: 
Updated on: 
2 min read

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் சூழல் நிலவுவதால், அடுத்த 3 நாட்களுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்புத் தெரிவிக்கிறது.

சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 10.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன. தரமணியில் 9.5 செ.மீ., நந்தனத்தில் 8.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தாமரைப்பாக்கம் மற்றும் ஊத்துக்கோட்டையில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சோழவரத்தில் 8 செ.மீ., செங்குன்றத்தில் 7.8 செ.மீ., பூண்டி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் தலா 6.8 செ.மீ. மழை பெய்துள்ளது. பூவிருந்தவல்லி மற்றும் திருவள்ளூரில் தலா 5.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இரவு முழுவதும் மழை பெய்துள்ளது. உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மானாமதி, பெருநகர், சாலவாக்கம், கம்மாளம்பூண்டி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்குச் செல்வோர், வீடு திரும்புவோர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தென்காசியில் நேற்று ஒரே நாளில் 295 மி.மீ மழை பெய்துள்ளது.

150 மி.மீ. வரை மழை பெய்யுமா?

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளப் பதிவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்வதாகவும், காலை 8.30 மணிக்குள் சில பகுதிகளில் மழைப்பொழிவு 100 முதல் 150 மி.மீ. வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் புதுச்சேரியிலும் பல இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

5 டிஎம்சி-யைத் தாண்டிய சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம்!

இதற்கிடையே, அக்டோபர் 21, 2026 நிலவரப்படி சென்னை குடிநீர் ஏரிகளின் மொத்த நீர்மட்டம் 5 டிஎம்சி-யைத் தாண்டியுள்ளதாகப் பிரதீப் ஜான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, நகருக்கு அருகிலுள்ள புழல் ஏரிப் பகுதியில் நீர்வரத்து தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் மழை பெய்ய வேண்டியுள்ளதாகவும், அடுத்த 3 நாட்களில் பெய்யும் மழையால் நீர்வரத்து சீராக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. எனவே, பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com