தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், தேர்தல் வெற்றிக்குப் பிறகு இன்று முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகச் சம்பவத்திற்குப் பிறகு, சுமார் 9 மாத இடைவெளியில் அவர் மீண்டும் கரூர் செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, தவெக தலைவர் ஜோசப் விஜய் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அவரை நேரில் காண மிகக் குறுகிய சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால், நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அந்த சோகச் சம்பவத்தில் மூச்சுத்திணறி 41 பேர் உயிரிழந்தது, தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விபத்து, அன்றைய தேர்தல் அரசியலின் மிகப்பெரிய சோக நிகழ்வாக மாறியது. இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அந்த கூட்ட நெரிசல் திட்டமிட்ட சதி என தவெக தரப்பினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் கரூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்சி வழியாக சென்னை திரும்பிக் கொண்டிருந்த ஜோசப் விஜய், கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்ட தகவலை அறிந்ததும் உடனடியாக மீண்டும் கரூர் திரும்ப நினைத்த நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் அவருக்கு அனுமதி வழங்கவில்லை சொல்லப்படுகிறது.
இதையடுத்து அவர் நேரடியாக கரூர் செல்ல முடியாத சூழல் நிலவி வந்த நிலையில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் பின்னர் சென்னையில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலுக்கு அழைத்து வந்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மன்னிப்பும் கேட்டு தவெக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கி இருந்தார். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான பிறகும் அவர் கரூர் செல்லாமால் இருந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்து வந்தது. இந்த நிலையில், சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு இன்று அவர் முதலமைச்சராக முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.
அங்கு கரூர் – சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க வளாகத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜோசப் விஜய் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில், தகுதி பெற்ற 32 குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி ஆணைகளை வழங்க உள்ளார். அதன்பிறகு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவிலும் அவர் பங்கேற்கிறார். மேலும், ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்